

சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கும் படத்துக்கு ‘ராஜ வம்சம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பேட்ட’. இதில், ரஜினியின் நண்பனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் சசிகுமார். அவர் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்தார். தொடர்ந்து, தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர, ‘நாடோடிகள் 2’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ மற்றும் ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், ‘ராஜ வம்சம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கதிர்வேலு, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சசிகுமாரின் 19-வது படமான இதில், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
ராதாரவி, தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், விஜயகுமார், ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செந்தூர் ஃபிலிம்ஸ் சார்பில் டிடி. ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
சென்னை, பொள்ளாச்சி, பாங்காக் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.