

மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது. இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பகல் 2:00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 347 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 88 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. இதனால், பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “மரியாதைக்குரிய அன்பு நரேந்திர மோடி அவர்களே, மனமார்ந்த வாழ்த்துகள். சாதித்துவிட்டீர்கள்... இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காலை 11 மணியளவில் அவரது வீட்டில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.