ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல்

ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல்
Updated on
1 min read

நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23-ம் தேதி எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 - 2018 ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

சமீபத்தில் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார் நாசர்.

இந்நிலையில், இன்று (மே 28) நீதிபதி பத்மநாபன் ஜூன் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இம்முறையும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு இருப்பதால், இம்முறை ராதிகா தலைமையில் எதிரணி களம் காணவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in