மாப்ளே... மாமா பலே பாண்டியா’வுக்கு 57 வயது!

மாப்ளே... மாமா பலே பாண்டியா’வுக்கு 57 வயது!
Updated on
3 min read

யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அழவைத்துவிட முடியும். ஆனால் சிரிக்கவைப்பது ரொம்பவே கஷ்டம். சினிமாவில் ஆள்மாறாட்டம் என்றாலே சிரிப்புத்தான். அதிலும் அந்தக் காலத்தில் பிள்ளையார் சுழி போட்ட ஆள்மாறாட்ட காமெடிப் படங்களுக்கு முன்னோடியாக இருக்கவும் மிகப்பெரிய சாமர்த்தியமும் திரைக்கதைத் தெளிவும் வேண்டும். படம் பார்த்துவிட்டு எல்லோரும் ‘பலே’ சொல்லவேண்டும். அப்படி எல்லோராலும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற படம்தான் ‘பலே பாண்டியா’.

சாதாரண, மிகமிகச் சாதாரண கதைதான் ‘பலே பாண்டியா’. ஆனால் அந்தக் கதைக்கு லாஜிக்குகளும் நியாயமான காமெடிகளும் சேர்த்துக் கலவையாக்கித் தந்திருப்பதுதான் படம், ஆகச்சிறந்த வெற்றி அடைந்ததற்கு முக்கியக் காரணம்.

அண்ணியின் கொடுமை தாங்காமல், தற்கொலைக்கு முயலுவான் நாயகன். அவன்தான் பாண்டியன். அப்போது அங்கே ஒரு பெண் அவன் தற்கொலையைத் தடுக்க தவிக்கிறாள். அங்கே வந்த எம்.ஆர்.ராதா பாண்டியனை மருது என நினைத்துக் காப்பாற்றச் செல்கிறார். ஆனால் இல்லை எனத் தெரிந்ததும், ‘இப்போ சாவாதே. அப்புறமா சாவு’ என ப்ளான் போடுகிறார்.

ஆக, அண்ணன் ஓர் விஞ்ஞானி. அவர் ஒரு சிவாஜி. ரவுடித்தனம் பண்ணுகிற மருது, இன்னொரு சிவாஜி. தற்கொலைக்கு முயலுகிற சங்கர் மூன்றாவது சிவாஜி. ஆனால், இவர்தான் முதல் சிவாஜி. அதாவது ஹீரோ. அதாவது பாண்டியன். பலே பாண்டியன்.

மூன்று சிவாஜியே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதான். அப்படியிருக்க இன்னொரு ஸ்வீட் ஷாக்... எம்.ஆர்.ராதா. ஒருவர் நல்லவர். தேவிகாவின் அப்பா. இன்னொரு ஆள், கெட்ட ஆசாமி. வழக்கம்போல, டிப்பிக்கல் எம்.ஆர்.ராதா.

சாவதற்கு முனைந்த சிவாஜி, தேவிகாவின் அன்பாலும் காதலாலும் வாழ ஆசைப்படுகிறார். ஆனால் அவரைக் கொல்ல எம்.ஆர்.ராதா திட்டமிடுகிறார். அப்போது ஓரிடத்தில் சிக்கி மாட்டிக்கொள்ள, அங்கிருந்து மிகப்பெரிய அதேசமயம் பைத்தியக்கார செல்வந்தரிடம் மாட்டிக்கொள்கிறார். தன் பையன் என்று சிவாஜியை நினைக்கிறார். சொத்தையெல்லாம் எழுதிவைக்கிறார். அங்கே ஓர் தங்கை கிடைக்கிறாள்.

பணமே பிரதானம் என்றிருக்கும் மனைவியிடம் சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார் விஞ்ஞானி சிவாஜி. அவரின் மனைவி ஜெயலலிதாவின் அம்மாவான சந்தியா. ஏகப்பட்ட கடன் தொல்லை. எம்.ஆர்.ராதாவின் அடியாள் ‘மருது’ சிவாஜி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, சங்கர் சிவாஜியைப் போட்டுத்தள்ளி, அந்த இடத்துக்கு மருதுவை அனுப்பி, பணத்தையெல்லாம் சுருட்ட நினைக்கிறார் எம்.ஆர்.ராதா. இதேபோல, கடனையெல்லாம் அடைக்க, தம்பியைப் போல் செல்லுங்கள் என்று விஞ்ஞானி புருஷனை மேக்கப் போட்டு அனுப்புகிறாள் மனைவி.

இப்படியான, சிக்கல் மேல் சிக்கல் கொண்ட திரைக்கதை முடிச்சுகள். ஆனால் மிக அழகாகவும் அலப்பரையைக் கொடுத்தும் காமெடித் திருவிழாவே பண்ணியிருப்பார் இயக்குநர் பி.ஆர்.பந்துலு. சிவாஜி - தேவிகா ஜோடி பாந்தம். சிவாஜியின் தங்கையை டாவடிக்கும் கே.பாலாஜியின் காமெடியும் அமர்க்களம். ஒருகட்டத்தில், மூன்று சிவாஜிகளும் ஒரே மாதிரியாக இருந்து தியேட்டரையே அல்லுசில்லாக்கிவிடுவார்கள். தெறித்துச் சிரித்தே களைத்துப் போனார்கள் ரசிகர்கள். மூன்று சிவாஜி. மூவருக்கும் தனித்தனி நடை. உடல் பாஷை. டயலாக் டெலிவரி. மேனரிஸம் என வெரைட்டி, பியூட்டி காட்டியிருப்பார்... ஒரே சிவாஜி.

1952ம் ஆண்டு தன் திரையுலக வாழ்க்கையை, ‘பராசக்தி’யில் இருந்து தொடங்கிய சிவாஜி போடாத வேடங்களே இல்லை. முதன்முதலாக இரட்டை வேடம் போட்ட படம் ‘உத்தமபுத்திரன்’. இது 1958ம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய ஹிட்டடித்தது. சிவாஜியின் நடிப்புக்கு மட்டுமின்றி ஸ்டைலுக்கும் பெயர்பெற்ற படம் இது.

இதையடுத்து  ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த ‘தெய்வ மகன்’ 1969ம் ஆண்டு வெளியாகி பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமா? ஆஸ்கார் உள்ளிட்ட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் சொல்லுவார்கள்.

இடைப்பட்ட காலத்தில் அதாவது உத்தமபுத்திரனுக்குப் பிறகு, 1962ம் ஆண்டு, பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த ‘பலே பாண்டியா’ ரிலீசானது. ஆறேழு நடிகர்களை வைத்துக்கொண்டு, அதிரிபுதிரி வெற்றியைக் கொடுத்தார் பந்துலு.

1962ம் ஆண்டு, சிவாஜி மொத்தம் எட்டு படங்களில் நடித்தார். கே.சங்கர் இயக்கத்தில் ‘ஆலயமணி’, பி.எஸ்.ரங்கா இயக்கத்தில் ‘நிச்சய தாம்பூலம்’, ஏ.பீம்சிங் இயக்கத்தில் ‘படித்தால் மட்டும் போதுமா?’, ’பார்த்தால் பசி தீரும்’, ‘பந்தபாசம்’ என மூன்று படங்களில் நடித்தார். மேலும் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘வடிவுக்கு வளைகாப்பு’, யோகானந்த் இயக்கத்தில் ‘வளர்பிறை’ என்றும் நடித்தார் சிவாஜி. இவற்றில் ஆலயமணி, படித்தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும், நிச்சயதாம்பூலம் என பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளியான ‘பலே பாண்டியா’வும் பலே வெற்றியைக் கொடுத்தது. எல்லாப் படங்களும் சீரியஸ் சப்ஜெக்ட். இந்தப் படம் மட்டுமே சிரிப்பு மருந்தென வந்தது.

1962ம் ஆண்டு, மே மாதம் 26ம் தேதி ரிலீசானது ‘பலே பாண்டியா’. ‘வாழ நினைத்தால் வாழலாம்’, ‘நான் என்ன சொல்லிவிட்டேன்’, ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’, ’அத்திக்காய் காய்’ என எல்லாப் பாடல்களுமே இனிக்கும் கனிகள். முக்கியமாக, ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று சிவாஜி பாட, பாலாஜி கடம் வாசிக்க, அதை ராதா தொடை தட்டி ரசிக்க, நடுநடுவே எம்.ஆர்.ராதாவின் சேஷ்டைகள் எத்தனை தடவை பார்த்தாலும் கண்ணில் நீர் வர சிரித்து மகிழ்வோம் என்பது உறுதி. ஜாம்பவான்கள் பின்னிப்பெடலெடுத்திருப்பார்கள். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்.

இன்றைக்கும் தொலைக்காட்சியில் ‘பலே பாண்டியா’ படம் திரையிட்டால், சேனல் திருப்ப மனசில்லாமல், ரிலாக்ஸ்டாக படம் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள் ரசிகர்கள்.

சிவாஜியின் ‘பலே பாண்டியா’ ரிலீஸான நாள் இன்று (1962, மே 26ம் தேதி). கிட்டத்தட்ட, படம் வெளியாகி, 57 வருடங்களாகிவிட்டன.

‘பலே பாண்டியா’ இன்றைக்கும் ‘பலே பாண்டியா’தான்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in