

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடித்துவரும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சஞ்சய் பாரதி. ரியா சக்ரபோர்டி மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
முனிஷ்காந்த், ரேணுகா இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கிய இதன் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘விக்கி டோனர்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம் ‘விக்கி டோனர்’. ஷூஜித் சர்கார் இயக்கிய இந்தப் படம்தான், ஆயுஷ்மான் குர்ரானா நடித்த முதல் படம். நடிகர் ஜான் ஆப்ரஹாம் தயாரித்த இந்தப் படம், 2012-ம் ஆண்டு ரிலீஸானது.
மீபத்தில் வெளியான விஷாலின் ‘அயோக்யா’ உள்பட பல படங்களை வாங்கி வெளியிட்ட ஸ்கிரீன் ஸீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாகத் தயாரிப்பில் இறங்குகிறது. இந்தப் படத்துக்கு ‘தாராள ராஜா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
இந்தப் படத்துக்குப் பிறகு, சசி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
சசி தற்போது ‘ சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் நாயகர்களாக நடித்துள்ளனர்.