

கமல் தனது கருத்தை நிரூபிக்க, தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பது நல்லது என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த 12-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தில் பேசிய கமல், “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பாக இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார்.
கமலின் இந்தப் பேச்சு, சர்ச்சையானது. பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் தங்களுடைய கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்து அமைப்புகள் எதிர்ப்பின் காரணமாக கடந்த 2 நாட்களாகப் பிரச்சாரத்தை ரத்துசெய்த கமல்ஹாசன், நேற்று (மே 15) திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சக்திவேலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “நான் அரவக்குறிச்சியில் பேசியதற்காக என் மீது கோபப்படுகிறார்கள். நான் பேசியது சரித்திர உண்மை. உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும்” என்றார்.
இந்நிலையில், ‘தீவிரவாதியின் மதத்தை ஆராய வேண்டிய அவசியம் என்ன?’ என்று கமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று நிறுவ நாம் முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, கமலின் கருத்து தேவையில்லாதது. அந்த இரண்டு வரிகளை மட்டும் பெரிதுபடுத்தி வெறுப்பை உமிழ்வது, இன்னும் பெரிய பிரச்சினை. இரண்டையும் நான் கண்டிக்கிறேன். அதிகம் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என பொதுமக்கள் முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன்.
மறைமுக நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும், கைத்தட்டல்கள் பெறவும் சர்ச்சையான விஷயங்களைத் தலைவர்கள் பேசக்கூடாது. ஒழுக்கமில்லாத, பிரிவினை உண்டாக்கும் கருத்துகளை ஒடுக்க, போதிய விதிமுறைகளும் நமது அமைப்பில் இருக்க வேண்டியது அவசியம்.
கமல்ஹாசன், தான் பேசியது வரலாற்று உண்மை என மீண்டும் கூறியுள்ளார். ஒரு தீவிரவாதியின் மதத்தை ஆராய வேண்டிய அவசியம் என்ன? அது கருத்தில் எடுக்கப்படக்கூடாதுதானே? அவர் தனது கருத்தை நிரூபிக்க, தீவிரவாதத்துக்கு மதச்சாயம் பூசாமல் இருப்பது நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.