Last Updated : 08 May, 2019 10:28 AM

 

Published : 08 May 2019 10:28 AM
Last Updated : 08 May 2019 10:28 AM

பொண்டாட்டி மேல பிரியம் உள்ளவரு பாக்யராஜ்; ஆனா இதுல தப்பா காட்டிட்டாங்க!’’ - ‘விடியும் வரை காத்திரு’ குறித்து கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த படங்களில் ‘விடியும் வரை காத்திரு’ திரைப்படம் ரொம்பவே முக்கியமானது. பாக்யராஜ், சத்யகலா, ஆர்.வி.டி.மணி, கோகுல்நாத், சங்கிலிமுருகன் முதலானோர் நடித்த இந்தப் படத்தில், நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார் பாக்யராஜ். அதாவது, சொத்துக்காக சத்யகலாவைத் திருமணம் செய்துகொண்டு, பிறகு அவரைக் கொல்ல முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

1981-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி ‘விடியும் வரை காத்திரு’ திரைப்படம் ரிலீஸானது. இன்றுடன் படம் ரிலீஸாகி, 38 வருடங்களாகிவிட்டன.

 ‘விடியும் வரை காத்திரு’ படம் குறித்தும் அந்தப் படத்துக்கு வந்த விமர்சனங்கள் குறித்தும் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், 'இந்து தமிழ்' இணையதளத்துக்குப் பிரத்யேகப் பேட்டி அளித்தார்.

‘’என்னோட முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ முதல் பாதி காமெடியாவும் இரண்டாவது பாதி சீரியஸாவும் இருந்துச்சு. ‘என்னய்யா இது. கதையை நல்லாக் கொண்டுபோயிட்டு, டக்குன்னு ஏதோ எழவு வீடு மாதிரி காட்டிட்டியே’னு பலரும் சொன்னாங்க.

அடுத்தாப்ல, ‘ஒருகை ஓசை’ படத்துல, காமெடியோடயே வாய் பேச முடியாத ஒருவனின் மன உணர்வுகளைச் சொல்லியிருந்தேன். மூணாவது படமான ‘மெளன கீதங்கள்’ படத்துல டைவர்ஸ், கணவனும் மனைவியும் பிரிஞ்சிடுறாங்க அப்படீங்கற விஷயத்தையே காமெடியாவே சொல்லிருந்தேன். தவிர, டைவர்ஸ் பண்ணினாலும் கூட, மனைவியோட பிறந்த வீட்டை, அந்தக் குடும்பத்தாரை ஹீரோ காபந்து பண்ணிட்டிருக்கான்னு சென்டிமென்ட்டாவும் வைச்சிருந்தேன். இதுதான் சுகுணாங்கற கேரக்டர் மனசு மாறுறதுக்கான விஷயங்கள்ல ஒண்ணா இருந்துச்சு. சொல்லப்போனா, இந்தப் படத்தின் மூலமா, தாய்க்குலங்களோட ஆதரவு எனக்கும் என் படங்களுக்கும் அமோகமா கிடைச்சிச்சு.

இதுக்குப் பிறகு எடுத்த ‘இன்று போய் நாளை வா’ படம், ரோடு சைடு ரோமியோக்கள் பத்தின ஜாலியான படம். அப்புறம்தான் ‘விடியும் வரை காத்திரு’ பண்ணினேன். ஆரம்ப காலகட்டத்துல தூயவன் சார்கிட்ட சான்ஸ் கேட்டுப் பலமுறை போயிருக்கேன். அவர்தான், ஜி.ராமகிருஷ்ணன்கிட்ட என்னைச் சேர்த்துவிட்டாரு. ஆனா அந்தப் படம் ஆரம்பிச்ச வேகத்துலயே நின்னுருச்சு. இதுக்கு அப்புறம்தான் எங்க டைரக்டர்கிட்ட (பாரதிராஜா) ‘16 வயதினிலே’ படத்துல சேர்ந்தேன்.

தூயவன் சாருக்காக நான் பண்ணின படம்தான் ‘விடியும் வரை காத்திரு’. அவர்தான் தயாரிப்பாளர். இந்த சமயத்துல ஒருவிஷயத்தைச் சொல்லணும். ‘இவரு இந்த மாதிரி படங்களாத்தான் பண்ணுவாரு’ன்னு முத்திரை குத்திருவாங்களோனு ஒரு பயம் வந்துச்சு. ஏன்னா, அப்போ, எங்க டைரக்டர் பாரதிராஜாவையே, ‘இவரு இப்படித்தாம்பா படம் எடுப்பாரு’ன்னு சொல்லிட்டாங்க. அதனால, ‘விடியும் வரை காத்திரு’ படத்தை கொஞ்சம் த்ரில்லர் சப்ஜெக்ட்டா எடுத்தேன்.

படத்தைப் பாத்துட்டு, நிறைய பேர் நல்லாவே ரசிச்சாங்க. அதுலயும் அந்த ட்ரெயின் சீன்லாம், செம க்ளாப்ஸ் இருந்துச்சு. ட்ரெயினுக்கு முன்பக்கத்துலேருந்து ஆர்.வி.டி.மணி ஓடிவருவாரு. பின்பக்கத்துல நான் ஓடிவருவேன். அவர் வர்றதுக்குள்ளே, நான் டிரெயின்ல ஏறி உக்கார்ந்திருப்பேன். இதுக்கெல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. இந்த வரவேற்பெல்லாம் ஆண்கள்கிட்டேருந்து!

பெண்கள் படம் பாத்துட்டு நினைச்சது வேறவிதமா இருந்துச்சு. அடுத்த படத்துக்காக, ஈரோடு போனப்ப, ஒரு தியேட்டர்லேருந்து படம் விட்டு கூட்டம் வந்துட்டிருந்துச்சு. ‘நம்ம படம் பாத்துட்டுதான் வர்றாங்க சார்’னு அசிஸ்டென்ட்ஸ் சொன்னாங்க. காரை ஸ்லோவா ஓட்டுங்கன்னு சொல்லி, என்ன பேசுறாங்கன்னு கேக்கலாம்னு மெதுவாப் போனோம். அப்போ, படம் பாத்துட்டு வந்த லேடீஸ்லாம், ‘என்னடி இது, படத்தை தப்பா எடுத்திருக்காங்க’ன்னு ஒருத்தங்க சொன்னாங்க. ‘என்னடி சொல்றே’னு இன்னொருத்தங்க கேட்டாங்க. அதுக்கு அந்த லேடி, ‘நம்ம பாக்யராஜ் பொண்டாட்டி மேல எவ்ளோ பிரியமா இருக்கறவரு. டைவர்ஸானா கூட, மனைவி மேல அன்பா இருக்கறவர்தானே. ஆனா இதுல பொண்டாட்டியவே கொல்லப் பாக்குறார்னு தப்பா எடுத்திருக்காங்க’ன்னு சொன்னாங்க.

கதை சொல்ற டைரக்டரை விட, ஸ்க்ரீன்ல வர்ற ஹீரோவைத்தான் ஜனங்க கெட்டியாப் பிடிச்சுக்குவாங்க. நாம ஒரு கிரியேட்டரா என்ன மெசேஜ் சொல்றோமோ, அதை பாஸிட்டிவா சொல்லிடணும். இல்லேன்னா, இப்படியான விமர்சனங்களையும் சந்திச்சாகணும்.

இதுக்குப் பிறகு, பாரதிராஜா சாரும் கமலும் சேர்ந்து படம் பண்ணும் போது, திரும்பவும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதை எழுதிக் கொடுத்தேன். ஆனா கேரக்டரை பாஸிட்டிவா காமிச்சேன். அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’.

’விடியும் வரை காத்திரு’ படத்துக்குக் கிடைச்சது போலவே ‘சின்னவீடு’ படத்துக்கும் எதிர்மறை விமர்சனம் கிடைச்சது. அதுவும் எங்க பாட்டி என்னை வறுத்தெடுத்துட்டாங்க.

‘ஏண்டா, என்னடா படம் எடுத்திருக்கே நீ? பொண்டாட்டி குண்டுன்னு காரணத்தைக் காட்டி, சின்னவீடு வைச்சிக்கிறானாமாம். ஏன் உங்க அம்மா கூடத்தான் குண்டு. அப்படியா உங்க அப்பாரு நடந்துக்கிட்டாரு. அடுத்தாப்ல சினிமா பண்ணும்போது, கதையை எங்கிட்ட சொல்லு, நான் சரிபண்ணித்தாரேன்’னு பாட்டி சொன்னாங்க’’.

இவ்வாறு கே.பாக்யராஜ் ‘விடியும் வரை காத்திரு’ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.   

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x