

தண்ணீர் சேமிப்பில் அக்கறையுடன் செயல்படுவோம் என்று சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. மே 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு.
இந்நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பொருட்டு சமூக வலைதளங்களில் #AskSuriya என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சூர்யா பதிலளித்தார். 'என்.ஜி.கே.' படம், ஜோதிகாவுடன் இணைந்து நடிப்பது, கார்த்தியுடன் இணைந்து நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சுமார் அரை மணி நேரம் பதிலளித்தார்.
அதன் முடிவில், கோடை காலம் என்பதால் ஒரேயொரு விஷயம் சொல்லலாம் என்று நினைக்கிறேன் என்று சூர்யா கூறியதாவது, “இந்தக் கோடை காலத்தில் தண்ணீர் சேமிப்பு விஷயத்தில் இன்னும் அக்கறையுடனும் சிந்தனையுடனும் செயல்படுவோம்.
பறவைகள், விலங்குகள் என மற்ற ஜீவராசிகளுக்கும் தண்ணீர் தருவோம். அதேவேளையில், நாம் தண்ணீரை உபயோகிக்கும்போதும் சிக்கனமாக, பொறுப்புடன் செயல்படுவோம்” என்று கூறினார். தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சூர்யா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.