

இன்றைக்கு சமூக அக்கறையுள்ள படங்கள் வருவதே குறைவு என்று 'தர்மபிரபு' இசை வெளியீட்டு விழாவில் வன்னியரசு வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.
முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனனி ஐயர், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு'. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மே 4) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் யோகி பாபு நடித்த படங்களின் இயக்குநர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதில் தயாரிப்பாளர் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் முத்துக்குமரன் இருவருமே நண்பர்கள் என்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசுவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் வன்னியரசு பேசும் போது, “தயாரிப்பாளர் ரங்கநாதன், இயக்குநர் முத்துக்குமரனும் என் நண்பர் தான். ஆகையால் இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்த வந்தேன். நான் யோகி பாபுவின் தீவிர ரசிகன். நான் மட்டுமல்ல, என்னுடைய தலைவரும் யோகி பாபு வருகிறார் என்றால் அந்த சேனலை மாற்றமாட்டார்.
இன்றைக்கு சமூக அக்கறையுள்ள படங்கள் வருவதே குறைவு. சமூக அக்கறையுள்ள படம், அரசியலை தீர்மானிக்கக்கூடிய படம், சமூக மாற்றங்களை நிகழ்த்தும் படம் என வெளிவருவது அரிதாக இருக்கின்றன. அரசியல் நையாண்டி அதிகமாக உள்ள படம் இது. அரசியலில் உள்ளவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதை மிகத் தீவிரமாக காட்டியிருக்கிறார்கள். யாராக இருந்தாலும் தவறு என்றால் தவறு என்று சொல்லக்கூடிய வலிமை சினிமாவுக்கு மட்டும் தான் உண்டு. அதை இப்படம் மிக தீவிரமாக காட்டியிருக்கிறது.
சினிமாவில் கருப்பாக இருக்கும் பெண்களைக் கிண்டல் செய்வது தொடர்கிறது. அவர்களை கிண்டல் செய்யும் காட்சிகளால் சமூக மாற்றம் நிகழாது. சமூகத்தை மேலும் சீரழிக்கத் தான் செய்யும்” என்று பேசினார் வன்னியரசு.