

'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கான 'ஆதித்யா வர்மா' இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. ஜூன் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தமிழில் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இறுதிப் பிரதியைப் பார்த்த தயாரிப்பாளர்களுக்கு படம் திருப்தி அளிக்கவில்லை.
ஆகையால், முழுமையாக தயாரான அப்படம் கைவிடப்பட்டது. தற்போது 'அர்ஜுன் ரெட்டி' படத்தை 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை 'அர்ஜுன் ரெட்டி' இயக்குநர் சந்தீப் வாங்காவிடம் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ரவி.கே.சந்திரனும், இசையமைப்பாளராக ரதனும் பணிபுரிந்து வருகிறார்கள்.
துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் தான் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும், படுவேகமாக ஒட்டுமொத்தமாகப் படத்தைமுடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படியே, இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்பு உள்ளது. அதையும் விரைவில் முடித்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது படக்குழு. ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.