

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் அருண் குமார். இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ‘சிந்துபாத்’ படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார். தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, வருகிற 16-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து ரிலீஸாகும் விஜய் சேதுபதி படம் என்பதால், அவருடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
அதேசமயம், வருகிற 17-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr. லோக்கல்’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. எனவே, இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள் மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே ‘ரெமோ’ மற்றும் ‘றெக்க’ படங்கள் மோதியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது திடீரென ‘சிந்துபாத்’ படம் போட்டியில் இருந்து விலகியுள்ளது. போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட சில காரணங்களால் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனேகமாக ஜூன் மாதம் ரிலீஸாகலாம் என்கிறார்கள். எனவே, சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி படங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கியுள்ள ‘Mr. லோக்கல்’ படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.