விஷாலை மறைமுகமாக சாடிய தயாரிப்பாளர் சிவா

விஷாலை மறைமுகமாக சாடிய தயாரிப்பாளர் சிவா
Updated on
2 min read

'தர்மபிரபு' இசை வெளியீட்டு விழாவில், விஷாலை கடுமையாகச் சாடியுள்ளார் தயாரிப்பாளர் சிவா.

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனினி ஐயர், ரமேஷ் திலக், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்மபிரபு'. யோகி பாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகும் முதல் படம் இதுவாகும். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் யோகி பாபு நடித்த படங்களின் இயக்குநர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில், இயக்குநர் முருகேசன் தனது பேச்சில், “கடந்தாண்டு இதே நேரத்தில்தான் திரையுலக ஸ்ட்ரைக் நடந்தது. அதற்கான காரணங்களில் புக் மை ஷோ டிக்கெட் புக்கிங்கில் 30 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுப்பதைக் குறைப்பதும் இருந்தது.

இப்போது 3 நாட்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்தேன். 30 ரூபாயை 40 ரூபாயாக அதிகரித்துவிட்டனர். ஏன் அதிகரித்தனர்? என்பதற்கான காரணம் எதுவுமே தெரியவில்லை” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். அவரைத் தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் சிவா, முருகேசனுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசினார்.

அவர் தன்னுடைய பேச்சில், “புக் மை ஷோவுக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை. அது தனியார் சம்பந்தப்பட்ட விவகாரம். அதை எதிர்த்து கேள்விகேட்க வேண்டியவர்கள் எல்லாம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதன் விளைவாக இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த நிலைமைகள் மாறும். அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர்களை அணுகி கேட்டாலே செய்து கொடுத்துவிடுவார்கள், அப்படியொரு அரசாங்கம்தான் இப்போது இருக்கிறது. ஆனால், போய் கேட்கக்கூடிய தலைமை நம்மிடம் இல்லை.

அவர்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் போய், ‘செய்து கொடுங்கள்’ எனக் கேட்க இயலாது. யாரை அழைத்துப் போய் பேசுவது என்று எங்களுக்குத் தெரியாமல், தயாரிப்பாளர்கள் எல்லாம் அனாதை போல் ஒரு புறம் நின்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய பிரச்சினைகளுக்கு எங்கு போய் பேசுவது என்று தெரியாமல், விநியோகஸ்தர்கள் சங்கத்தில் போய் பேசிக் கொள்கிறோம். ஏனென்றால், நாங்கள் பேச இடமில்லை. அந்த மாதிரி ஒரு நிலையில் தமிழ் சினிமா தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 4 மாதங்களில் நிலைமைகள் மாறி அனைத்தும் சரி செய்யப்படும்.

எதையும் முயற்சி செய்யாத ஒரு அமைப்பு, எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு தலைவர் இருக்கிறார். என் வீட்டில் என் குழந்தைகளுக்கு என்ன பிரச்சினை என்பது எனக்குத்தான் தெரியும். பக்கத்து வீட்டுக்காரரிடம் நம் வீட்டுப் பொறுப்பைக் கொடுத்தால் எப்படித் தெரியும் என்று நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். தொழில்முறையில் படங்கள் பண்ணுபவர்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தலைவராக இருக்க வேண்டும். படம் தயாரித்த அனைவருமே தயாரிப்பாளர்கள் அல்ல. தானே நடித்து, தானே தயாரித்துக் கொள்பவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது. அவர்கள் தொழில்முறை தயாரிப்பாளர்களே அல்ல. அப்படியொருவரை தலைமைக்கு கொண்டு வந்ததுதான் இந்த சீரழிவுக்கு காரணம்.

அனைத்து பொது அமைப்புகளுமே அரசாங்கம் சார்ந்து செயல்பட வேண்டும். அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும் என்றால், அதை வேறு எங்காவது போய் செய்துகொள்ள வேண்டும். அதுதான் தவறு. தமிழ் ராக்கர்ஸை 6 மாதத்தில், ஒரு வாரத்தில் ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம் காணும். அனைத்துக்குமே ஒரு முடிவு வரும்” என்று பேசினார் தயாரிப்பாளர் சிவா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in