

மக்களவைத் தேர்தலில் 7200 கி.மீ பிரச்சாரப் பயணம் மேற்கொண்டதை உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார் உதயநிதி ஸ்டாலின். இதுவரை குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டுமே செய்தவர், முதல்முறையாக தமிழகம் முழுக்க பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று (ஏப்ரல் 16) மாலையுடன் பிரச்சாரப் பயணம் முடிவுற்றது. தனது பிரச்சாரப் பயணம் குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "26 நாட்கள், 36 நாடாளுமன்றத் தொகுதிகள், 18 இடைத்தேர்தல் தொகுதிகள், 140 மக்களவைத் தொகுதிகள், மாநிலத்தைச் சுற்றி 7200 கிலோமீட்டருக்கும் அதிகமான பயண தூரம். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு, அரவணைப்புக்கு நன்றி. இது ஒரு நெகிழ்ச்சி தரும் அனுபவம். தயவு செய்து 18 ஏப்ரல் அன்று வாக்களியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகள் முடிவுற்றதால், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சைக்கோ' மற்றும் மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் 'கண்ணை நம்பாதே' ஆகிய படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்