

ஜே.கே.ரித்தீஷ் மரணச் செய்தி கேட்டு நொறுங்கிவிட்டேன் என்று ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்
முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஆனால், சில காலத்துக்குப் பின் அதிமுகவில் இணைந்தார். திரையுலகிலும் சில படங்கள் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் வெற்றிக்காக பெரிதும் உழைத்தவர். தற்போது விஷாலுக்கு எதிரான அணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜே.கே.ரித்தீஷின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஜே.கே. ரித்தீஷின் திடீர் இறப்பால் அதிர்ச்சியடைந்து நொறுங்கிவிட்டேன். இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. அவருக்கு வயது 46 தான் ஆகிறது. இவ்வளவு சிறு வயதிலா மரணம்? அவர் எனக்கு சகோதரர் போன்றவர். பலரது வாழ்க்கையை மாற்ற உதவியவர். வலியையும் வேதனையையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
உங்களை ரொம்பவே இழக்கிறேன் சார். என்னை உங்களது சகோதரன் போல் நடத்தினீர்கள். 'எல்.கே.ஜி' படத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தீர்கள். அன்பும், அக்கறையும், நேசமும் மிக்கவர். நீங்கள் ஒரு மிகப்பெரிய மனிதர். மூன்று குழந்தைகளுடன் கூடிய உங்கள் அழகான குடும்பத்திலிருந்து கடவுள் உங்களைக் கொண்டு சென்றது கொடூரம்'' என்று தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'எல்.கே.ஜி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஜே.கே.ரித்தீஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் இது என்பது நினைவுகூரத்தக்கது.