

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரைப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் அருண்குமார். இக்கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'சிந்துபாத்'.
ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது படப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், 'சிந்துபாத்' திரைப்படம் மே 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அஞ்சலி, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை, ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் அடுத்ததாக 'சிந்துபாத்' வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.