

கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில், அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார் நிவேதா பெத்துராஜ்.
‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை, அவரே தயாரித்தார். ரகுமான், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதைத் தொடர்ந்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பல நாட்கள் ஆனாலும், இன்னும் ரிலீஸாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது.
இந்நிலையில், அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை கார்த்திக் நரேன் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
தற்போது ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். மேலும், பிரபாஸுடன் ‘சாஹு’, ஹீரோவாக ‘பாக்ஸர்’ ஆகிய படங்களும் அருண் விஜய் கைவசம் உள்ளன.
‘நரகாசூரன்’ படத்துக்குப் பிறகு ‘நாடக மேடை’ என்ற படத்தை இயக்குவதாக அறிவித்தார் கார்த்திக் நரேன். ஆனால், தற்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.