

'தமிழரசன்' படத்துக்காக இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடும் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது ‘தமிழரசன்’ படம். இப்படத்தில் ‘தனி ஒருவன்’ இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்துக்கு பழநிபாரதி, ஜெயராம் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். இதில் ‘பொறுத்தது போதும்; பொங்கிட வேணும்; புயலென வா!’ என்ற பாடலை பாடகர் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
கடந்த 2009-ல் மலையாளத்தில் வெளியான ‘பழசிராஜா’ படத்துக்குப் பிறகு திரைப்படப் பாடல்கள் பாடாமல் இருந்துவந்த ஜேசுதாஸ் தற்போது ‘தமிழரசன்’ படத்துக்காக பாடியிருக்கிறார். படத்தில் புரட்சிப் பாடலாக இருக்கும் இந்தச் சூழலை இளையராஜா மீதான அன்பால் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா இசையில் `நந்தலாலா’ படத்துக்குப் பின், சுமார் 9 ஆண்டுகள் கழித்து யேசுதாஸ் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.