

இந்தியாவில் உருவாக்கப்பட்ட சூப்பர் ஹீரோ படங்கள் ஏன் வரவேற்பைப் பெறவில்லை என்ற கேள்விக்கு, விஜய் சேதுபதி சுவாரசியமாக பதிலளித்தார்.
மார்வல் சினிமாட்டிக் யுனிவர்சின் மூன்றாவது கட்டத்தில் கடைசிப் படமாக வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் இந்தப் படம், ஏப்ரல் 26-ம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மாநில மொழிகளில் வெளியாகும் பதிப்புகளும் தனி கவனம் ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்து வருகிறது டிஸ்னி-மார்வல் நிறுவனம். இதன் ஒரு பகுதியாக, சர்வதேச நட்சத்திரமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்துக்காக தனியாக ஒரு பாடலை உருவாக்கிவுள்ளார்.
இப்பாடலின் அறிமுகம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 'அயர்ன்மேன்' கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்துள்ள விஜய் சேதுபதி மற்றும் 'ப்ளாக் விடோ' கதாபாத்திரத்துக்கு டப்பிங் செய்துள்ள ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் 'இந்தியாவில் உருவாக்கப்பட்ட சூப்பர் ஹீரோஸ் படங்கள் அனைத்துமே கமர்ஷியல் ரீதியில் வெற்றி பெறவில்லை. பெரிதாக கொண்டாடப்படுவுமில்லை. ஏன் என்று நினைக்கிறீர்கள்?' என விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்:
இல்லை. நாம் எடுக்கும் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹீரோக்கள் படம் தான். அது உங்களுக்கு தெரியவில்லை. ஒருவரை அடித்தால் அவர் உயரே பறந்து போய் விழுகிறார். அப்படியென்றால் அது சூப்பர் ஹீரோ படம் தானே. பூச்சி கடித்து ஸ்பைடர் மேன் ஆகிறார்கள், அதே போல் இங்கு நாம் அடித்தால் ஒருவர் பறந்து போய் விழுகிறார். என்னைப் பொறுத்தவரை நம் படங்கள் அனைத்துமே சூப்பர் ஹீரோ படங்கள். சூப்பர் ஹீரோ என்றால் வேறு யாருமல்ல, கெட்டதை அழிப்பவன் தான் சூப்பர் ஹீரோ.
இவ்வாறு விஜய் சேதுபதி பதிலளித்தார்.