

‘துருவங்கள் 16’ கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் அருண் விஜய்.
‘துருவங்கள் 16’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை, அவரே தயாரித்தார். ரகுமான், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதைத் தொடர்ந்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பல நாட்கள் ஆனாலும், இன்னும் ரிலீஸாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது.
இந்நிலையில், அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை கார்த்திக் நரேன் இயக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். மேலும், பிரபாஸுடன் ‘சாஹு’, ஹீரோவாக ‘பாக்ஸர்’ ஆகிய படங்களும் அருண் விஜய் கைவசம் உள்ளன.
கார்த்திக் நரேனும் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். கார்த்திக் ராஜு இயக்கத்தில் சந்தீப் கிஷண் நடித்துள்ள ‘கண்ணாடி’ படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.