

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய் கூட்டணியில் 'தளபதி 63' படம் பிரம்மாண்டமாக கால் பந்தாட்ட மைதானம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்றும் கால் பந்தாண்டத்தை மையமாக 256 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து, சில படத்தயாரிப்பு நிறுவனங்களிடம் கதை சொல்லி இருந்தாகவும், இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அட்லீ இயக்கும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடைய கதையை ஒத்திருப்பதை அறிந்து தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் மீது ஆலோசனை நடத்திய சங்கம், உறுப்பினராகி 6 மாதங்கள் ஆனால் மட்டுமே கதை திருட்டு தொடர்பான புகாரை எடுத்துக் கொள்ள முடியும் என கூறி தன்னுடைய புகாரை நிராகரித்தது.
எனவே 'தளபதி 63' படத்தின் கதைக்கு உரிமை கோரியும், படப்பிடிப்புக்கு தடை விதிக்கக் கோரியும், இயக்குநர் அட்லீ, ஏ.ஜி.எஸ் படத்தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் ஆகியோரை எதிர்மனுதாராக சேர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.