

இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் ஆகியோருக்குத் தெரிந்தது, தமிழ்த் திரையுலகினருக்குத் தெரியவில்லை என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்தார்.
சாந்தி பவானி நிறுவனம் சார்பில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாளிகை'. தில் சத்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினரோடு இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் நடிகை ஆண்ட்ரியா பேசியதாவது:
''இப்படம் முதலில் கன்னடத்தில் உருவாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர், 'ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் உள்ளது. ஆகையால், தமிழில் எடுக்க வேண்டும்' என்று சொன்னார்.
ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குநர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றியுள்ளதில் மகிழ்ச்சி. ஆனால் தமிழ்த் திரையுலகில் இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குநர்களிடம் வேலை செய்திருக்கிறேன்.
'மாளிகை' படத்தின் அனுபவம் மிக முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க முக்கியக் காரணம் எனக்கு இரண்டு வேடங்கள் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்''.
இவ்வாறு ஆண்ட்ரியா பேசினார்.