

பாலிவுட் நடிகையான கல்கி கோச்சலின், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத், தற்போது அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், தாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் இது.
அஜித்துடன் சேர்ந்து வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில், பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின், இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குத்தாட்டம் போடவைக்கும் இந்தப் பாடலில், அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே பங்கு பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, மறுபடியும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். அதைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.