

சூர்யாவிடம் கற்றுக் கொண்டது மற்றும் அவரோடு நடித்த அனுபவங்களை 'என்.ஜி.கே' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார் சாய்பல்லவி
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய்பல்ல்வி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'என்.ஜி.கே'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. மே 31-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இரண்டு நாயகிகளில் ரகுல் ப்ரீத் சிங் மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதில் கலந்து கொண்ட சாய்பல்லவி பேசியதாவது:
என்.ஜி.கே படப்பிடிப்புக்கு சென்ற வந்தது, பள்ளிக்கு சென்று வந்தது போல் தான் இருந்தது. முதல் 2, 3 நாட்கள் நமக்கு காய்ச்சல் வரக்கூடாதா என்று பயந்து கொண்டிருந்தேன். என்.ஜி.கே படப்பிடிப்புக்கு முன்புவரை இது தான் டயலாக், இப்படித்தான் நடிக்கணும் என்று கற்றுக் கொண்டு தான் சென்றுள்ளேன். ஆனால், இந்தப் படப்பிடிப்புக்கு நான் தயாராகி செல்லும் போது என்னுடைய முன்னெடுப்பு சிறிதாக இருக்கும். செல்வராகவன் சாருடைய முன்னெடுப்பு வானளவில் இருக்கும். வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்துமே இதற்கு முன்பு பண்ணாதது.
கொஞ்ச நாளில் அம்மாவிடம் 'நான் நடிகை என்று ஏமாற்றிக் கொண்டிருந்தேன் போல' என்று சொன்னேன். ஒவ்வொரு டேக்குமே 10 டேக் ஆகுது. ஆனால், சூர்யா சார் ரொம்ப பொறுமையாக பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு டேக் எக்ஸ்ட்ரா போனால் கூட, எனக்கு வெறுப்பாக உணர்வேன். இதை புரிந்து கொண்டு சூர்யா சார் 'இப்படித்தான் இருக்கும்' என்று சொல்வார். இப்படத்தின் சூட்டிங் முடிய முடிய, இன்னும் கொஞ்ச நாள் சூட்டிங் போகக் கூடாதா, இன்னும் கொஞ்சம் நடிக்கலாமே என்று தோன்றியது.
செல்வராகவன் சார் இயக்கத்தில் நடித்தால், நல்ல நடிகராக வெளியே வருவோம் என்று சொன்னார்கள். இங்கு என்ன ஸ்பெஷல் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். ஆனால், படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் தெரிந்தது, அவர் எப்படி எனக்கு தெரிந்ததை விட்டு புதிதாக சொல்லிக் கொடுத்துள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். சாய் பல்லவி புதிதாக தெரிகிறாள் என்றால் காரணம் செல்வா சார் தான். ஒவ்வொரு கேரக்டரும் என்ன எக்ஸ்ப்ரஷன் கொடுக்கணும் என்பதை தனியாக உட்கார்ந்து சொல்லிக் கொடுப்பார். 10-வது டேக் போனால் கூட ரொம்ப பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். நாம் அனைவருமே செல்வராகவன் சாருடைய படங்களைப் பார்க்க கொடுத்து வைத்துள்ளோம்.
சூர்யா சாருடைய மிகப்பெரிய ரசிகை நான். அவர் ஒவ்வொரு காட்சிக்கும் எப்படி தயாராகிறார் என்பதை பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் லைட்மேனைக் கூட 'அண்ணா' என்று தான் அழைப்பார். அவர்களுடைய குடும்பத்தை பற்றி விசாரிப்பார். இதை எல்லாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இன்னுமொரு 20 ஆண்டுகளில் சூர்யா சாரைப் போல தன்னடக்கம், கடின உழைப்பு போன்றவை வந்தது என்றால் ஆசிர்வாதிக்கப்பட்டவளாக உனர்வேன். அவர் மில்லியனில் ஒருவர். ரசிகையாக இல்லாமல் அவர் பக்கத்திலிருந்து பணிபுரிந்திருக்கிறேன் என்பதால் சொல்கிறேன்.
யுவன் சாருடைய இசையில் இது 2-வது படம். நமது எமோஷன் காட்சிகள் எல்லாம் அவருடைய பின்னணி இசையால் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிடுவார்.
இவ்வாறு சாய்பல்லவி பேசினார்.