மீண்டும் மிஷ்கின் - விஷால் கூட்டணி: துப்பறிவாளன் 2 உருவாக்கம்

மீண்டும் மிஷ்கின் - விஷால் கூட்டணி: துப்பறிவாளன் 2 உருவாக்கம்
Updated on
1 min read

மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க விஷால் முடிவு செய்துள்ளார். அப்படம் 'துப்பறிவாளன்' படத்தின் 2-ம் பாகமாக உருவாகவுள்ளது.

2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்த படம் 'துப்பறிவாளன்'. பிரசன்னா, வினய், இயக்குநர் கே.பாக்யராஜ், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு அரோல் கொரேலி இசையமைத்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்று விஷால் மற்றும் மிஷ்கின் இருவருமே பேட்டிகளில் தெரிவித்து வந்தார்கள். ஆனால், எப்போது என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்புக்கு இடையே 'துப்பறிவாளன் 2' கதையை விஷாலைச் சந்தித்து கூறியுள்ளார் மிஷ்கின். அக்கதை மிகவும் பிடித்துவிடவே, இந்த ஆண்டே தொடங்கலாம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

இதனால் தற்போது இயக்கி வரும் 'சைக்கோ' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, 'துப்பறிவாளன் 2' பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார் மிஷ்கின்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in