

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்துக்கு 'சூரரைப் போற்று' என்று தலைப்பிட்டுள்ளனர்.
செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' ஆகிய படங்களை முடித்துள்ளார். சூர்யா. இவ்விரண்டு படங்களின் இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதலாவதாக மே 31-ம் தேதி 'என்.ஜி.கே' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டையொட்டி படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
'சூரரைப் போற்று' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் லோகோ வடிவமைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளராக நிக்கேத் பொம்மிரெட்டி, கலை இயக்குநராக ஜாக்கி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இன்று (ஏப்ரல் 13) சுதா கொங்கரா படத்தின் தலைப்பு, நாளை (ஏப்ரல் 14) 'காப்பான்' படத்தின் டீஸர் என தொடர்ச்சியாக வெளிவரவுள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படத்தை உருவாக்கி வருகிறார் சுதா கொங்கரா என்பது குறிப்பிடத்தக்கது.