

திறமையான மனிதர்களில் ஒருவர் என நான் வியந்தவர் மகேந்திரன் என்று கமல் தெரிவித்துள்ளார்
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் மத்தியில் கமல் பேசியதாவது:
மகேந்திரனுடன் வெகுநாள் நட்பு எனக்குண்டு. படங்கள் நாங்கள் குறைவாகச் செய்திருந்தாலும், நட்பு வலுவாகவே இருந்தது. பக்கத்து ஊர்க்காரர். திறமையான மனிதர்களில் ஒருவர் என நான் வியந்தவர்.
‘தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். பிறகு கூடி பல படங்கள் செய்திருக்கிறோம். ஆனால், முதலில் 'முள்ளும் மலரும்' படத்தில்தான் நான் நடிப்பதாக இருந்தது. தமிழ்ப் படங்கள் அதிகமாகச் செய்ய ஆர்வமில்லாமல் இருந்த பாலு மகேந்திராவையும் இவரையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அதுபோலவே அவர்கள் செய்தார்கள்.
அந்தப் படத்துக்கு கிட்டத்தட்ட புரொடக்ஷன் மேனேஜர் மாதிரி எல்லாம் வேலை பார்த்துள்ளேன். ஏனென்றால், படம் அற்புதமான படம் என்று எனக்குத் தெரியும். எந்தவொரு காரணத்தைக் கொண்டும் நின்றுவிடக்கூடாது என்று நாங்கள் அனைவரும் சேர்த்து வெளிக்கொண்டு வந்த படம்தான் 'முள்ளும் மலரும்'. அதற்குப் பிறகு பல அற்புதமான படங்களைக் கொடுத்துள்ளார்.
அவரைப் பார்த்து, சினிமா எடுக்க வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டமே வந்தது என்று சொன்னால் மிகையாகாது. அவரது முடிவு, உச்சத்தைத் தொட்ட பிறகுதான் ஏற்பட்டு இருக்கிறது என்பதில் சந்தோஷம். பல திறமைசாலிகள் திறமை வெளிவராமலேயே சென்றதைப் பார்த்திருக்கிறேன். இவருடைய நினைவுகள் தமிழ் சினிமாவில் என்றும் தாங்கி நிற்கும்.
இவ்வாறு கமல் பேசினார்.