நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை: விஷால் இரங்கல்

நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை: விஷால் இரங்கல்

Published on

என்னால் என் நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஆனால், சில காலத்துக்குப் பின் அதிமுகவில் இணைந்தார். திரையுலகிலும் சில படங்கள் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் வெற்றிக்காக பெரிதும் உழைத்தவர். தற்போது விஷாலுக்கு எதிரான அணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜே.கே.ரித்தீஷின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''வாழ்க்கை எப்படி முன்கணிக்க முடியாததாகிவிடுகிறது. என்னால் என் நண்பன் ஜே.கே.ரித்தீஷ் மரணத்தை நம்பமுடியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது. நடிகர் சங்கத் தேர்தலின் போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்துக்கு மனவலிமையைக் கொடுக்குமாறு கடவுளைப் பிராத்திக்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in