

இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா என்று 'மெஹந்தி சர்க்கஸ்' பத்திரிகையாளர் சந்திப்பில் ஷான் ரோல்டன் புகழாரம் சூட்டினார்.
இயக்குநர் ராஜூமுருகன் கதை, வசனத்தில் உருவாகியுள்ள படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ரங்கராஜ், ஸ்வாதி த்ரிபாதி, விக்னேஷ் காந்த், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இவ்விழாவில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது:
'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசைக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா சார் தான். குறிப்பாக அவரது இசையில் 80-களில் வெளியான படங்களை தனியாகச் சொல்லலாம். பாடலின் வரிகள், இசைக்கோர்வைகள் அனைத்துமே ஒரு மேஜிக்கலாக இருக்கும். அதே போல் செய்து பார்த்தால் சரியாக வராது.
அவருடைய இசை தான் 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் இசைக்கான தாக்கம் என்று சொல்லலாம். அதை படம் பார்க்கும் போது உணர்வீர்கள். பழைய இசை, புதிய இசை என்று பலர் விவாதம் செய்வதாக கேள்விப்பட்டேன். என்னைப் பொறுத்தவரை எப்போதுமே நல்லாயிருக்கிற இசை தான் நல்ல இசை. பழைய இசை என்று ஒன்று கிடையாது. இளையராஜா சாருடைய இசையை பழையது என்று சொல்வதை ஒப்புக்கொள்ள முடியாது.
கிணற்றில் எப்போதுமே தண்ணீர் வந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இளையராஜாவின் இசையும். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து அவரது இசையைக் கேட்டால் அதிலிருந்து ஒரு இன்ஸ்பிரேஷன் கிடைக்கும். அவரது இசையை மேலோட்டமாகப் பார்த்தால் சிம்பிளாகத் தெரியும். இசையையே டெக்னாலஜியாக உபயோகித்தவர் இளையராஜா.
இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே அவர் தமிழ் சினிமாவுக்காக செய்தது தான். அவருக்கு சமர்ப்பணமாக இப்பாடல்கள் இருக்கும். ஒரு படம் வெற்றி அடைய வேண்டுமானால் இரண்டு விஷயம் முக்கியம். ஒன்று படம் பெரிதாக சத்தம் போட வேண்டும். இல்லை என்றால் மொத்த மீடியாவும் படத்தைக் கொண்டாட வேண்டும். அப்படிக் கொண்டாடும் படமாக 'மெஹந்தி சர்க்கஸ்' இருக்கும். இன்னும் பத்து வருடம் கழித்தாலும் இந்தப் படம் மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன்''.
இவ்வாறு ஷான் ரோல்டன் பேசினார்.