

நம் சொந்த விஷயங்களில் எப்படி நீதிமன்றங்கள் தலையிட முடியும் என்று 'இ.பி.கோ 302' விழாவில் கஸ்தூரி தன் பேச்சில் குறிப்பிட்டார்.
செளத் இந்தியா தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் 'இ.பி.கோ 302’. கஸ்தூரி, நாக சக்தி, வர்ஷிதா, போண்டாமணி, வின்ஸ்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சலங்கை துரை இயக்கியுள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கஸ்தூரி பேசியதாவது:
எதற்கெடுத்தாலும் டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். காரணம் கேட்டால் டிக் டாக்கால் தான் தவறுகள் நடக்கின்றன என்று சொல்கிறார்கள். இப்படித்தான் சில வருடங்களுக்கு சினிமாவை குற்றம் சாட்டினார்கள். எனக்கு ஒரு சந்தேகம் யார் உங்களை கையை பிடித்து இழுத்து வந்து கட்டாயப்படுத்தி சினிமாவை பார்க்க வைப்பது?. அப்படி கெட்டுப் போவோம் என்று தெரிந்தும் ஏன் அந்த சினிமாவை பார்க்கிறீர்கள்? இப்படி சொல்லும் நவீன பட்டினத்தார்கள் யாராவது அரசே நடத்தும் மதுபானக்கடைகளை மூட சொல்லியிருக்கிறார்களா?
800 ஆபாச இணையதளங்களை தடை செய்ததற்கு எதிராக போராடுவார்கள். ஆனால் டிக் டாக்கை தடை செய்யவேண்டும் என்று கூறுவார்கள். ஏனென்றால் ஆபாசப் படங்களில் நடிப்பவர்கள் முகம் தெரியாதவர்கள். டிக் டாக் பயன்படுத்துபவர்கள் எல்லாம் நம் வீட்டுப் பெண்கள். அதுதானே?
டிக் டாக்கினால் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்கள் இருக்கிறார்கள்., தங்கள் திறமைகளை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன்? டிக் டாக் மூலம் கணிதப்பாடத்தை கூட எளிமையாக கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் கூட இருக்கிறார்கள்.சில உண்மைகள் ஏற்றுக் கொள்ள கசக்கத்தான் செய்யும்.
இலங்கையில் நடந்த தொடர் படுகொலையை அமெரிக்க சதி என்று முட்டுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். தவறை தவறு என்று ஒப்புக் கொள்ளும் பக்குவம் நம் நாட்டில் குறைவு. அப்படியே ஒப்புக் கொள்பவரையும் நீ தவறு செய்தவன் தானே என்று கடைசி வரைக்கும் குற்ற உணர்விலேயே வைத்திருப்போம். இதனால் தான் பொள்ளாச்சி சம்பவம் போன்ற பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்படும் பெண்கள் கூட தைரியமாக வெளியே சொல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 2002ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு என்ற பெண்ணுக்கு இபிகோ 302 சட்டத்தின் கீழ் இப்போது நிவாரணம் வழங்கியிருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.
இவர்களையெல்லாம் நிற்க வைத்து சுட வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் அவ்வாறு சுடுவதற்கு நம் சட்டத்தில் இடம் கிடையாது. அந்த கோபத்தை நாம் டிக் டாக்கில் தான் காட்டுகிறோம். டிக் டாக்கை தடை செய்தால் அதற்கு மாற்றாக வேறொன்று வரும்.
இப்படியே ஒவ்வொன்றையும் தடை செய்து கொண்டே இருக்க முடியுமா? ஒரு விஷயத்தை செய்யாதே என்று சொன்னால் திருட்டுத் தனமாக செய்வார்கள். நம் சொந்த விஷயங்களில் எப்படி நீதிமன்றங்கள் தலையிட முடியும்?
இவ்வாறு கஸ்தூரி பேசினார்.