

சமூக வலைதளத்தில் தெரிந்த கருத்துகளுக்கு நடிகர் விஜய்யிடம் மன்னிப்பு கோரியுள்ளார் நடிகர் கருணாகரன்.
நடிகர் கருணாகரன் சமூக வலைதளமான ட்விட்டரில் விறுவிறுப்பாக இயங்கும் சில நடிகர்களில் ஒருவர். சினிமா சார்ந்த பதிவுகள் மட்டுமல்ல, அவ்வப்போது அரசியல் பதிவுகளையும் அவர் பதிவு செய்வார். திமுக சார்பு அரசியல் பார்வை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை. இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், "குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா" என்று ட்வீட் செய்திருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.
அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்கும் அவருக்கும் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டது. அனைத்துக்குமே பதிலடி கொடுத்து வந்தார். அவரது தொலைபேசி எண்ணை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர, பலரும் அவரை அலைபேசியிலும் திட்டித் தீர்த்தார்கள். இச்சம்பவம் தொடரவே, சில மாதத்துக்கு முன்பு ட்விட்டர் தளத்திலிருந்தே விலகினார்.
இந்நிலையில், மீண்டும் ட்விட்டரில் இணைந்தாலும் எவ்வித கருத்தையும் வெளியிடாமல் இருந்தார். நேற்று (ஏப்ரல் 18) வாக்களித்து விட்டு தனது புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 19) தனது ட்விட்டர் பதிவில், ‘‘நான் பொதுவாக யாரையும் வெறுப்பதில்லை. நடிகர் விஜய்க்கு எதிராக வெறுக்கத்தக்க அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்கக் கூடாது.
அதற்காக அவரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். அவர் நான் விரும்பும் நடிகர், அவருக்கும் இது தெரியும். சமூக வலைதளத்தில் நான் பயன்படுத்திய எந்தவொரு வார்த்தையாவது யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் கருணாகரன்.
இந்த திடீர் மாற்றத்தால், நீண்ட காலமாக நடைபெற்று வந்த விஜய் ரசிகர்களுடனான பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கருணாகரன்.