

சமீபத்தில் ஜெயம் ரவி - ஹரி இருவரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இக்கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
’அடங்கமறு’ படத்தைத் தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. காஜல் அகர்வால் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 'கோமாளி' என தலைப்பிட்டுள்ள இதன் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது.
இப்படத்தைத் தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ஜெயம் ரவி. மேலும், மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்', அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவியைச் சந்தித்து கதையொன்றைக் கூறியுள்ளார் ஹரி. கதை மிகவும் பிடித்துவிடவே, ஒரு முழுமையான குடும்பப் பின்னணி கொண்ட கமர்ஷியல் படம் பண்ணலாம் என்று ஜெயம் ரவி முடிவுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் தயாரிப்பாளர் முடிவானவுடன் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
'சாமி ஸ்கொயர்' படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாக அறிவித்தார் ஹரி. ஆனால், சூர்யா தொடர்ச்சியாக வெவ்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதால், ஜெயம் ரவியைச் சந்தித்து கதை கூறியுள்ளார் ஹரி.
'பொன்னியின் செல்வன்' படத்தின் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக லட்சுமண், அஹ்மத், ஹரி ஆகியோரின் படங்களை ஜெயம் ரவி முடித்துக் கொடுத்துவிடுவார் எனத் தெரிகிறது