

தேசிய அளவிலான கராத்தே போட்டியில், நடிகர் சூர்யாவின் மகன் வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டியைக் காண சூர்யா தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
தேசிய அளவிலான ’ஷென் இஷ்ரின்யூ’ கராத்தே போட்டி டெல்லியில் நடைபெற்றது. 40 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் தண்டர் கேக் பிரிவில் சூர்யாவின் மகன் தேவ் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தப் போட்டியை சூர்யா, ஜோதிகா, மகள் தியா ஆகியோர் நேரில் கண்டுகளித்தார்கள்.
இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், திரையுலகினர் சிலரும் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனது மகன் கலந்து கொள்ளும் இறுதிப் போட்டியைக் காண இந்தோனேசியாவில் இருந்து வந்திருக்கிறார் சூர்யா. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சயீஷா ஆகியோர் நடித்து வரும் படம் ’காப்பான்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஜாவா தீவில் நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பு முடிந்ததும் அங்கிருந்து விமானம் மூலம் சூர்யா டெல்லி சென்றார். ஜோதிகா மற்றும் சூர்யா குடும்பத்தினர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். பின்னர் போட்டியில் தேவ் வெற்றி பெற்றதும் மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்த சூர்யா 'என்ஜிகே' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் மகள் தியா மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.