Last Updated : 01 Apr, 2019 04:46 PM

 

Published : 01 Apr 2019 04:46 PM
Last Updated : 01 Apr 2019 04:46 PM

சில நேரங்களில் சில மனிதர்கள்’ - அப்பவே அப்படி கதை

சிலநேரங்களில் சிலமனிதர்களுக்கு 42 வயது!

கதையோ, எழுத்தோ, கட்டுரையோ, சினிமாவோ... படிப்பவர்களையும் பார்ப்பவர்களையும் ஏதோ செய்யவேண்டும். மனசை உலுக்கி நிறுத்தவேண்டும். அன்றைய இரவில் தூங்கவிடாமல் செய்யவேண்டும். யாருக்கோ ஏற்பட்ட துக்கத்தை, வலியை, உணர்ந்து கதறவேண்டும். அப்படி புத்திக்குள்ளிருந்து எல்லாவிதமாகவும் நம்மை உசுப்பிவிட்ட மிக முக்கியமான படங்களில்... ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’.  

தமிழகத்தில், வாரப்பத்திரிகை ஒன்றில், எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை ஒன்று, தீயெனப் பற்றிக்கொண்டது. எங்கு பார்த்தாலும் அந்தக் கதை குறித்தே பேசப்பட்டது. வாசிப்பவர்கள், அந்தக் கதையை நேசித்தார்கள். கொண்டாடினார்கள். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேள்வி கேட்டுக்கொண்டார்கள். நடக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அந்தச் சிறுகதை... ‘அக்கினிப்பிரவேசம்’.

பிறகு இந்தச் சிறுகதை, ‘கங்கா எங்கே போகிறாள்?’ என நாவலாயிற்று. சிறுகதை முடியும் இடத்தில் இருந்து கதையைத் தொடங்கிய ஜெயகாந்தன், பின்னர் பல வருடங்கள் கழித்து, அதைத் திரைப்படமாகவும் படைத்தார். அதுதான் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’.

மழை. பெருங்காற்று. பேருந்து நிலையம். கல்லூரிப் பெண்கள்  பேருந்துக்குக் காத்திருக்க, எல்லோரும் ஏறிச் செல்கின்றனர். அங்கே ஒரேயொரு பெண் மட்டும் நிற்கிறாள். பேருந்துக்குக் காத்திருக்கிறாள். அப்போது கார் ஒன்று வருகிறது. பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறது. லிஃப்ட் கொடுப்பதாகச் சொல்லுகிறது. மறுப்பவள், ஒருகட்டத்தில் ஏறிக்கொள்கிறாள்.

அந்தக் கார் மழைநீரைக் கிழித்துக்கொண்டு பயணிக்கிறது. ஓரிடத்தில் கார் நிறுத்தப்படுகிறது. அந்தப் பெண், காருக்குள்ளேயே பலாத்காரப்படுத்தப்படுகிறாள். ஆச்சாரமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அழுதுகொண்டே வீட்டுக்கு வருகிறாள். அவளின் அம்மாவிடம் நடந்ததையெல்லாம் சொல்லுகிறாள். அவள் பெயர் கங்கா.

அம்மா அடி வெளுத்தெடுக்கிறாள். அவளின் அண்ணனோ, அவளை தரதரவென இழுத்து வெளியே போ என தள்ளுகிறான். பிறகு, ஒருவழியாக, ஊரில் இருக்கும் தன் அண்ணனிடம் கரையேற்றும்படி ஒப்படைக்கிறாள் அந்த அம்மா.

அவன், கிழம்தான். ஆனால், சபலக்கேஸ். தாய்மாமனாக இருப்பவன், அவளை அங்கங்கே தொடுகிறான். தொடாமல் பேசுவதே இல்லை. அசடு வழிய, காமம் கொப்புளிக்க, அவனின் பொழுதுகளில் கரையாமல் ஒதுங்கிக்கொண்டே இருக்கிறாள்.

படிக்கிறாள். பட்டம் பெறுகிறாள். வேலைக்குச் சேருகிறாள். அம்மாவுடன் தனிவீடு பார்த்து இருக்கிறாள். சில்மிஷம் பண்ணும் தாய்மாமன், ‘நீ யாருக்கும் பொண்டாட்டியா இருக்கமுடியாது. வப்பாட்டியாத்தான் இருக்கமுடியும்’ என்கிறான். நொறுங்கிப் போகிறாள்.

‘இவ்ளோ பேசுறவ, எவன் கெடுத்தானோ அவனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதுதானே’ என்று எகத்தாளமாய் பேசுகிறான். இந்தநிலையில்தான் பத்திரிகையில் வந்த ‘அக்கினிப்பிரவேசம்’ கதையைப் படிக்கிறாள் கங்கா. இது தன் கதையைப் போலவே இருப்பதாக உணருகிறாள். ஆனால், கதையின் முடிவு போல் தனக்கு நிகழவில்லையே என யோசிக்கிறாள். ஆர்.கே.வி எனும் எழுத்தாளரை சந்திக்கிறாள் கங்கா.

அவரின் மூலமாக, அந்த கார்க்காரனைத் தெரியவருகிறது அவளுக்கு. அவன் பெயர் பிரபு. போன் செய்கிறாள். சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பில், 12 வருடங்களுக்கு முன்பு, ஓர் மழைநாளில் நடந்ததைச் சொல்லுகிறாள் கங்கா. ஆனால் அவனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவில்லை அவள். அவனுக்கும் இது வலியைத் தருகிறது. அப்போது முதல் இருவருக்குள்ளும் ஒரு நட்பு, ஸ்நேகிதம் பூக்கிறது. அடிக்கடி சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அவன் வீட்டுக்கு இவளும், இவள் வீட்டுக்கு அவனுமாக வந்துபோகிறார்கள்.

கெட்டுப்போய்விட்டதை அம்மா உட்பட எல்லோரும் நம்பினார்கள். ஆனால் இப்போது நட்பாகப் பழகுவதை எவருமே ஏற்கத் தயாராகவில்லை. அவனுடைய மகள் மஞ்சுவுக்கும் கங்காவுக்குமான புரிதல் நிகழ்கிறது.

சகலத்தையும் அறிந்த அந்த எழுத்தாளர் ஆர்கேவி, கங்காவிடம் தன் உறவினரைத் திருமணம் செய்துகொள்ளக் கேட்கிறார். அண்ணா சம்மதிக்கிறான். அம்மா சம்மதிக்கிறாள். அவ்வளவு ஏன்... பிரபு கூட சம்மதிக்கிறான். ’நான் வராம இருந்தாத்தான் நீ கல்யாணம் பண்ணிப்பேன்னா, நான் இனிமே வரவே இல்ல. பாக்கவே இல்ல’ என்று சொல்லிச் செல்கிறான்.

கங்கா... யாருமே இல்லாமல், தனியே வாழ்கிறாள். ஒழுக்கத்துடனும் உலகம் குறித்த புரிதலுடனும் பொய்மையே இல்லாமல் நிம்மதியாக வாழ்கிறாள். படம் நிறைவுறுகிறது.

இங்கே, தற்செயலாக நிகழும் பலாத்காரம் கூட பெண்ணுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை முதல் இரண்டு ரீலிலேயே சொல்லிவிடுகிறார் ஜெயகாந்தன். அந்த சபலக்கேஸ் தாய்மாமாக்கள், ஏதேதோ பெயர்களில், எல்லாப் பெண்களும் கடந்து வந்திருப்பார்கள்.

தன்னிடம் மசியாமல் இருக்கும் கங்காவிடம், ‘நீ கல்யாணம் பண்ணிக்க தகுதியில்ல. வைப்பாட்டியாத்தான் இருக்கமுடியும்’ என்று முகத்தில் துப்பாத குறையாகச் சொல்லுகிறான். அதே கிழவன், அடுத்த விநாடியே, ‘எனக்கு வைப்பாட்டியா இருக்கியா?’ என்று கேட்கிறான்.

’12 வருஷமாச்சு. இன்னும் கல்யாணம் பண்ணிக்கலியா?’ என்று பிரபு கேட்கும் போது, பொங்குகிறாள் கங்கா. ‘இதெல்லாம் நடந்த பிறகும், வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டா, அதுக்குப் பேரு கல்யாணமே இல்ல’ என்கிறாள்.

கங்காவாக லட்சுமி. பிரபுவாக ஸ்ரீகாந்த். தாய்மாமனாக ஒய்.ஜி.பி. எழுத்தாளர் ஆர்கேவியாக நாகேஷ். ஸ்ரீகாந்திடம் பழகப் பழக, அவனுடைய சிகரெட் ஸ்மெல் கூட பிடிக்கிறது அவளுக்கு. ‘ப்யூன்கிட்ட சொல்லி, என் ரூம்ல ஒரு ஆஷ்ட்ரே வாங்கி வைக்கச் சொல்லுங்க’ என்று சொல்லுவது அசத்தல்.

‘ஏதோ.. அக்கினிப் பிரவேசம்’னு ஒரு கதை. அந்தப் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாதாம். லிப்ட் கொடுக்குறானாம். இவளும் ஏறிக்கிறாளாம். அப்படி நடந்துடுதாம். என்ன கதை இது’ என்று ஜெயகாந்தனின் கதையை, ஜெயகாந்தனே விமர்சித்துக்கொள்ளும் வசனங்களும் இடம்பெற்றுள்ளது வியப்பு. சிறப்பு.

உன் அம்மாவிடம் நம் உறவைப் புரியவைக்கலாம் என்கிறான். என் மனைவி என்னையே புரிந்துகொள்ளவில்லை என்கிறான். என் மகள் ஒரு குழந்தை என்கிறான். ஆணின், மிக பாதுகாப்பான காரணிகளையும் காரணங்களையும் இதைவிட எப்படிச் சொல்லிவிடமுடியும்?

‘நான் யோக்கியன்னு சொல்லவரல. ஆனா உன்னை ‘ரேப்’ பண்ணிட்டேன்னு மட்டும் சொல்லிடாதே. நான் அப்படிப்பட்டவன் இல்ல’ என்று சொல்லுவதும் அதைக் கேட்டு லட்சுமி பதறி ஆறுதல் தெரிவிப்பதும் கவிதையாக்கப்பட்டிருக்கும்.

இத்தனை புதுமைகள் சொன்னாலும் மகாத்மா காந்தியின் போதனைகளையும் எடுத்தாளுகிறார் ஜெயகாந்தன். படம் முழுவதும் லட்சுமியின் ராஜாங்கம்தான். மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். அதேபோல், கோட்டும்சூட்டும் போட்டுக்கொண்டு, காரில் ஸ்டைலாக வந்து, எப்போதும் கையில் சிகரெட் பிடித்துக்கொண்டு, மெட்ராஸ் பாஷையைப் பேசிக்கொண்டு... ஸ்ரீகாந்த் அற்புதமான நடிப்பை வழங்கியிருப்பார்.

எம்.எஸ்.வியின் இசையும் கதைக்கு கனம் சேர்க்கிற விதமாக இருக்கும்.

அம்மாவுக்கும் பெண்ணுக்கும் சண்டை. வாய்த்தகராறு. அதில், ‘ஆமாம், இவ்ளோ பேசுறே. அப்பா செத்தப்போ தலைமுடியை சிரைச்சிண்டியா என்ன?’ என்று லட்சுமி கேட்பார். துவண்டுவிடுவார் அம்மா.

மறுநாள். விடிந்திருக்கும். பால்காரன் கூப்பிடுவான். பேப்பர்காரன் வந்திருப்பான். ஆனால், அம்மா இல்லை. எங்கே போனாள். பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் போது, அம்மா ஈரம் சொட்டச்சொட்ட வருவாள். தலைமுடியை மழித்திருப்பாள். மொட்டை போட்டிருப்பாள். திடுக்கிட்டுப் போவாள் லட்சுமி.

ஆங்காங்கே, பல காட்சிகளில் எம்.எஸ்.வி.யின் ஹம்மிங், நம்மை உலுக்கியெடுக்கும். வாணி ஜெயராமின் குரலில் ஒரு பாடல். எம்.எஸ்.வியின் குரலில் ஒரு பாடல். இரண்டுமே கதையோட்டத்துக்கு தடையாக இல்லை.

ஏ.பீம்சிங் இயக்கியிருப்பார். அவரின் படங்களைப் போல் இல்லாமல், புதுவிதமாகவே படைக்கப்பட்டிருப்பதுதான் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்கான தனித்துவம்.

1977ம் ஆண்டு, வெளியான படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. பல விருதுகளைப் பெற்றுத்தந்த படம். 1977ம் ஆண்டு, ஏப்ரல் 1ம் தேதி அன்று ரிலீசானது இந்தப் படம். இன்றுடன் 42 வருடங்களாகிவிட்டன.

ஒழுக்கமீறல்கள் கொண்ட உலகமாகிவிட்ட காலம் இது. ஆனாலும் ’சிலநேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை இப்போது பார்த்தாலும், எப்போது பார்த்தாலும் அன்றைய இரவில் நம்மைத் தூங்கவிடாது செய்யும். உலுக்கியெடுக்கும்.

சில நேரங்களில் சில மனிதர்கள்... மட்டுமல்ல... சில படங்களும் அப்படித்தான்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x