

எம்.ஆர்.ராதாவாக சிம்புவும், எம்.ஜி.ஆர் ஆக அரவிந்த்சாமியும் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு இயக்குநர் ஐக் விளக்கம் அளித்துள்ளார்.
‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐக். இவர் எம்.ஆர்.ராதாவின் பேரன் ஆவார். தனது 2-வது படமாக தாத்தா எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாகவும் அறிவித்தார்.
இதற்காக தாத்தாவைப் பற்றிய புத்தகங்கள், செய்திகள் என அனைத்தையும் சேகரித்து அதை திரைக்கதையாக வடிவமைத்து வருகிறார் ஐக். மேலும், எம்.ஆர்.ராதாவாக நடிக்க நடிகர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 24) காலை இணையத்தில் ஒரு செய்தி வெளியானது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை படமாக ஐக் இயக்கவுள்ளதாகவும், அதில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, எம்.ஆர்.ராதாவாக சிம்பு நடிக்கவுள்ளனர் என்று செய்தி வெளியானது.
இந்தச் செய்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இச்செய்தியில் உண்மையில்லை என்று இயக்குநர் ஐக் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக ஐக்கிடம் கேட்ட போது, ''முதலில் அந்தச் செய்தியே தவறு. நான் தாத்தா எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாற்றைத் தான் படமாக எடுக்கவுள்ளேன். அதில் நடிக்கவுள்ளவர்கள் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. பலரிடம் பேசிவருகிறேன். அனைத்துமே இறுதியானதால் மட்டுமே, வெளிப்படையாக அறிவிக்க முடியும்'' என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சிம்பு தரப்பில் விசாரித்த போது, "சிம்பு லண்டனில் இருந்து இந்தியா வந்தால் மட்டுமே கூற முடியும். அவர் லண்டனில் இருப்பதால் எங்களுக்கு இது தொடர்பாகத் தெரியாது" என்று கூறினார்கள்.
நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. பழமைவாதம் ஊறிப் போயிருந்த காலகட்டத்தில், சினிமா வழியே முற்போக்குக் கருத்துகளை விதைத்தவர். இன்றைக்கும் அவருடைய பல வசனங்கள் மேற்கோளாகவும், வாழ்க்கைத் தத்துவமாகவும் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.