கடவர் மூலம் தயாரிப்பாளராகும் அமலா பால்

கடவர் மூலம் தயாரிப்பாளராகும் அமலா பால்
Updated on
1 min read

'கடவர்' படத்தின் மூலம் தயாரிப்பாளராகும் அறிமுகமாகவுள்ளார் நடிகை அமலா பால்.

'ராட்சசன்' படத்துக்குப் பிறகு, தமிழில் 'அதோ அந்த பறவை போல', 'ஆடை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இவை போக மலையாளத்தில் 3 படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் 'கடவர்' என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ளது.

இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார் அமலா பால். இதில் தடய நோயியல் நிபுணர் டாக்டர் பத்ராவாக நடிக்கவுள்ளார். தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ளது குறித்து, 'கடவர்' படம் குறித்து அமலா பால் கூறியிருப்பதாவது:

இப்போது என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தெளிவு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். ஒரு நடிகையாக என்னை உந்தும் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் ரசிக்கிறேன். அத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு 'அதோ அந்த பறவை போல', 'ஆடை' படங்களுக்கு பிறகு 'கடவர்' கதையை கேட்டேன்.

இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக இருந்தது . இப்படத்தில் தடய நோயியல் நிபுணராக நடிக்கிறேன். இதில் நடிக்க நிறைய தயாராக வேண்டியுள்ளது. ஏனெனில் நாம் திரைப்படங்களில் பார்த்த வழக்கமான விசாரணைகள் போல இது இருக்காது.

கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்  உமா டத்தனால் எழுதப்பட்ட 'ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்த புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலை பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன்

இப்படத்தை ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது, அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு நடிகையாக பின்னால் இருந்து இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். என்னை போலவே இப்படத்தின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு ஆதரவாக இருக்க விரும்பினேன். ஆகவே, இதில் இணை தயாரிப்பாளராக என்னை இணைத்துக் கொண்டேன்.

இயக்குனர் அனூப் பணிக்கர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் அபிலாஷ் பிள்ளை ஆகியோர் திரைக்கதையில் குறிப்பிடத்தக்க வேலைகளை செய்துள்ளனர். அவர்களின் முன் தயாரிப்பு முயற்சிகளால் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்து விடுவோம் என நம்புகிறேன். இப்படத்தில் ஒரு புதிய தோற்றத்தில் தோன்றுவேன், ரசிகர்களுக்கு அது ஒரு சர்ப்ரைஸாக இருக்கும்

இவ்வாறு அமலா பால் தெரிவித்துள்ளார்.

'கடவர்' படத்தில் அதுல்யா, ஹரீஷ் உத்தமன், ரமேஷ் கண்ணா, வினோத் இன்பராஜ் உள்ளிட்ட பலர் அமலா பாலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in