

நடிகர் அஜித் திரையில் பேசும் வார்த்தைகளை ரசிகர்கள் வேதவாக்காக நினைப்பார்கள் என நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான 'பிங்க்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில், அஜித்தும், ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்து வருகின்றனர். 'நேர்கொண்ட பார்வை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார், ஹெச்.வினோத் இயக்குகிறார்.
உடன் நட்பாகப் பழகிய இளைஞர்களால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களைப் பற்றிய கதை இது. இந்தியில் இந்தப் படம் வெளியானபோது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டைப் பெற்றது.
இந்தப் படம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியதாவது:
"ஒரு உறவில் இருவரின் சம்மதமும் முக்கியம் என்பது பலருக்குத் தெரியாதது வருத்தமான விஷயம். இதற்கு கல்வியின்மை, ஆணாதிக்கம், திறந்த மனதுடன் எதையும் அணுகாதது எனப் பல காரணங்கள் இருக்கின்றன. 'பிங்க்' படத்துக்குச் சமமாக இருக்க வேண்டும் என்ற அழுத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் 'நேர்கொண்ட பார்வை' படத்தை நான் ரீமேக் போல பார்க்கவில்லை.
ஒரு பெண்ணாக அந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு நேர்மையாக திரைக்குக் கொண்டு வர முடியுமோ அதைச் செய்திருக்கிறேன். இந்தக் கதையில் இருக்கும் இன்னொரு பெரிய சாதகம் என்னவென்றால், அஜித் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். அவர் பேசுவதைக் கேட்க ரசிகர்கள் தயாராக இருப்பார்கள். அவரது வார்த்தைகள் வேதவாக்காகப் பார்க்கப்படும். சமூகத்தைப் பற்றிய கசப்பான கருத்துகளை ஒரு நட்சத்திரம் திரையில் சொல்லும்போது அது ஒரு உரையாடலை ஆரம்பிக்கும்".
இவ்வாறு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்தார்.
'நேர்கொண்ட பார்வை' ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.