

மக்களவைத் தேர்தலில் திமுகவுக்குப் பிரச்சாரம் செய்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு, இயக்குநர் கரு.பழனியப்பன் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இம்முறை பல்வேறு புது பிரபலங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கருத்துகளை மிகவும் சுவாரஸ்யமாக பல்வேறு மேடைகளில் பேசி வந்த கரு.பழனியப்பன், இம்முறை பிரச்சாரம் செய்து வருகிறார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து முதலில் தீவிரப் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கரு.பழனியப்பனின் இந்தப் பிரச்சாரப் பயணம் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பலரும் அவரது பிரச்சாரப் புகைப்படத்தை பதிவிட்டு, கிண்டல் செய்தும் சாடியும் வருகிறார்கள்.
இந்த சர்ச்சை தொடர்பாக இயக்குநர் கரு.பழனியப்பனைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.
''இணையத்தில் வரும் அனைத்து கருத்துகளையும் கவனிக்கிறேன். எந்தவொரு வேலை செய்ய வெளியே வந்தாலும் எதிர் கருத்து வரத்தான் செய்யும். எந்த வேலை செய்தால் எதிர் கருத்து வராது சொல்லுங்கள். எதிர் கருத்து வராமல் இருக்க வேண்டும் என்றால் வேலை செய்யாமல் இருக்க வேண்டும். அக்கருத்துக்களை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை'' என்று கரு.பழனியப்பன் தெரிவித்தார்.