

பார்க்க மாடர்ன் பெண்ணாக உலா வரும் கவுரி விஸ்வநாதன், வேந்தர் தொலைக்காட்சியில் ஆன்மிக நிகழ்வுகள், ஜோதிட நேரம் என ஆன்மிக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் அலாதியான பிரியம் கொண்டவராக சுற்றி வருகிறார்.
‘‘பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பெண் நான். இன்னைக்கு நான் அடைந்திருக்கிற இந்தத் தொகுப்பாளினி அடையாளம் முழுக்க என் அக்காவின் ஆசைக்காக செய்தது.
நான் சிறியவளாக இருக்கும்போதே அம்மா, அப்பாவை இழக்க நேர்ந்தது. என்னோட அக்கா விஜயலட்சுமிதான் என்னை வளர்த்தார். நான் ஒரு தொகுப்பாளினியாக சேனல்களில் கலக்க வேண்டும் என்பது அவரோட ஆசை. எப்படியாவது அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என முயற்சியில் இறங்கினேன். சத்யம், பாலிமர் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கினேன். இங்கே வேந்தர் சேனலுக்கு வந்தபிறகும் முதலில் செய்தி வாசிப்புதான்.
இப்பவும் எனக்கு அதில்தான் ஆர்வம் அதிகம். அதனால்தான் இடையில் வந்த சீரியல் வாய்ப்புகளுக்குக்கூட முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போனது. தொகுப்பாளினி வேலை எவ்வளவு பிடிக்குமோ, அதே மாதிரி ஆன்மிக விஷயம் என்றாலும் எனக்கு அவ்வளவு உயிர். அதனால்தான் விரும்பி இந்நிகழ்ச்சிகளை தொகுத்து அளிக்கிறேன்!’’ என்கிறார் கவுரி.