‘இந்தியன்’ல முதல் காட்சி ஞாபகம் இருக்கா? மிரட்டியிருப்பார் ஷங்கர் சார்’’ - குருநாதர் குறித்து வசந்தபாலன் நினைவுகள்

‘இந்தியன்’ல முதல் காட்சி ஞாபகம் இருக்கா? மிரட்டியிருப்பார் ஷங்கர் சார்’’ - குருநாதர் குறித்து வசந்தபாலன் நினைவுகள்
Updated on
2 min read

‘’ஷங்கர் சார், படத்துல வர்ற ஒவ்வொரு காட்சிக்கும் அவ்ளோ நேரம் யோசிப்பார். அப்படி மெனக்கெடுவார். ‘இந்தியன்’ படத்தோட ஓபன் சீன்ல என்ன யோசிச்சார் தெரியுமா?’’ என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்தார்.

ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, இயக்குநர் மிஷ்கினின் அலுவலகத்தில் மிகப்பெரிய விழா எடுத்துக் கொண்டாடப்பட்டது. இதில் மணிரத்னம், லிங்குசாமி, கெளதம் வாசுதேவ்மேனன், பாண்டிராஜ், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து தனியார் இணையதள சேனலுக்கு இயக்குநர் வசந்தபாலன் பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

போன வருஷமே 25 ஆண்டு நிறைவடைஞ்சிருச்சு. அவரோட அஸிஸ்டெண்டா இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து, சின்னதா ஒரு விழா எடுத்தோம். பெரிய விழாவா எடுக்கலாம்னா, அதுக்கு ஷங்கர் சார் ஒத்துக்கலை. இது வியாபாரமா மாறிடுமோனு பயப்பட்டாரு. தவிர, ஷங்கர் சாருக்கு கூச்சசுபாவம் உண்டு. பாராட்டையெல்லாம் கேட்டா, நெளிவார் ஷங்கர் சார். அதனால, சிம்பிளா சந்திச்சு சின்னதா விழா எடுத்தோம்.

விஷாலோட நிச்சயதார்த்தத்தின் போது, மிஷ்கின், பாலாஜிசக்திவேல், லிங்குசாமி ஷங்கர் சாருக்கு ஒரு விழா எடுக்கணும்னு பேசிருக்காங்க. அந்தப் பேச்சுதான், மிஷ்கின் அலுவலகத்துல இப்போ விழாவா நடந்துச்சு.

அப்போ மணிரத்னம் சார்லேருந்து எல்லாருமே பேசினோம். ஷங்கர் சார் பத்தி சொல்லும்போது, ‘அவர் ஒவ்வொரு காட்சிக்கும் அப்படி மெனக்கெடுவார். நுணுக்கி நுணுக்கி யோசிப்பார்னு சொன்னேன்.

அதுக்கு உதாரணமா, ‘இந்தியன்’ படத்திலேருந்து ஒரு சீன் சொன்னேன்.

படத்துல முதல் சீன் சென்னை மாநகராட்சி நுழைவாயில், இந்தியன் தாத்தா நடந்து உள்ளே போறார். அவரோட முதுகு தெரியுது. இதான் சீன் பேப்பர்ல எழுதிருந்தார். ஆனா, வேற ஏதாவது வேணுமேனு ஷங்கர் சார் சொன்னார்.

ஸ்கூலுக்குப் போற பசங்க, குப்பை கூட்டுபவர்கள், அழுக்கு உடையுடன் வேலைக்குச் செல்வோர்னு காட்டலாம்னு ஒவ்வொருத்தரும் சொன்னோம். இதுக்காக, ஒரு மாசம் எடுத்துக்கிட்டாரு. நுணுக்கி நுணுக்கி யோசிச்சிக்கிட்டே இருப்பார் ஷங்கர் சார்.  ‘இந்தியன் தாத்தா களை எடுக்கறதுக்குதான் இந்தக் கொலையெல்லாம் செய்றாரு. வாக்குவம் கிளீனர் மாதிரி, ஒரு லாரி இருக்கு. அந்த லாரி, ரோட்ல போகும்போதே, குப்பைகளையெல்லாம் இழுத்துக்கும். அந்த லாரியோட சக்கரத்தை டைட் க்ளோஸப்ல காமிப்போம்.

அப்புறமா, அப்படி இழுத்துக்கற சக்கரத்துக்குப் பக்கத்துலேருந்து ஒரு காகிதம் பறந்து வந்து, மாநகராட்சி கதவுல ஒட்டிகிட்டு நிக்கிது. அந்த டெய்லி பேப்பரை நோக்கி, கேமிரா நகருது. அங்கே அந்த பேப்பர்ல ஒரு கார்ட்டூன்... 21ம் நூற்றாண்டை நோக்கி இந்தியாங்கற வாசகம். லஞ்ச, ஊழலில் இந்தியாங்கற வார்த்தைகள். இதை கட் பண்ணினா, லஞ்சம் தரச்சொல்லி பொதுஜனத்துக்கு ஒருத்தர் அட்வைஸ் சொல்றாரு. அப்போ இந்தியன் தாத்தா நடந்துபோறாரு. அவரோட முதுகை மட்டும் காட்றோம்னு ஷங்கர் சொன்னாரு. அப்படித்தான் அந்தக் காட்சியும் எடுக்கப்பட்டது.

இந்தக் காட்சி ஓர் உதாரணம்தான். இதுவரை வந்த ஷங்கர் சாரோட படங்களில் எல்லாமே, ஒவ்வொரு காட்சியிலுமே இப்படிப் பாத்துப் பாத்து, யோசிச்சு யோசிச்சுப் பண்ணிருப்பார் ஷங்கர் சார்னு சொன்னேன். அங்கே இருந்த அத்தனை டைரக்டர்களும் மிரண்டுபோனாங்க.

இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in