

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'அயோக்யா' திரைப்படம் மே 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
‘சண்டக்கோழி 2’ படத்துக்குப் பிறகு விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட இப்படம், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மே 10-ம் தேதி வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
ராஷி கண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது. லகரி மியூஸிக் நிறுவனம் இதன் இசை உரிமையைக் கைப்பற்றியுள்ளது.