

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
'கனா' படத்தைத் தொடர்ந்து ப்ளாக் ஷீப் யு-டியூப் சேனலைச் சேர்ந்த கார்த்திக் வேணுகோபாலன் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தின் நாயகனாக விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னணியில் இருக்கும் ரியோ நடித்துள்ளார்.
நாயகியாக ஷெரில் நடிக்க, நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், யூ டியூப்பில் பிரபலமானவர்களை ஒன்றிணைத்து, இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் படமாக்கியுள்ளனர்.
இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, மே மாதம் வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தொடர்ந்து, தான் அடுத்து தயாரிக்கவுள்ள படத்தையும் முடிவு செய்துவிட்டார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.