

பிரசாந்தின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ரீதி வாஸ் நடிக்கவுள்ளார்.
கடந்த வருடம் நடந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீதி வாஸ் வெற்றி பெற்று பட்டம் வென்றார். இவரது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது திருச்சியில். சென்னை லயோலா கல்லூரியில் படித்து வருகிறார். மிஸ் வேர்ல்ட் 2018 போட்டியிலும் இந்தியா சார்பாக போட்டியிட்டு கடைசி கட்டத்தில் முதல் 30 இடங்களுக்குள் இடம் பிடித்தார்.
தற்போது இவர் ஏ.வெங்கடேஷ் இயக்கி, நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் மேலும் பிரகாஷ் ராஜ், நாசர், பூமிகா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.
சென்னை, ஹைதராபாத், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. பாடல்கள் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஹாங்காங்கில் படமாக்கப்படவுள்ளது.
2001-ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த 'சாக்லெட்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது நினைவுகூரத்தக்கது. அதே போல, பிரசாந்த் இதற்கு முன், 'ஜீன்ஸ்' படத்தில் ஐஸ்வர்யா ராய் (மிஸ் வேர்ல்ட்) உடனும், 'காதல் கவிதை' படத்தில் இஷா கோபிகர் (மிஸ் இந்தியா போட்டியாளர்) உடனும், 'பொன்னர் சங்கர்' படத்தில் பூஜா சோப்ரா (மிஸ் இந்தியா வேர்ல்ட்) மற்றும் திவ்யா பரமேஸ்வரனுடனும் (மிஸ் இந்தியா வேர்ல்ட்வைட்) நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.