

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், அஸ்வந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படம் குறித்து, அரசுப் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ள கருத்து இது:
‘சூப்பர் டீலக்ஸ்’, பேசப்பட வேண்டிய திரைப்படம். எத்தனையோ புத்தகங்களின் வழியே சமூகத்திற்குக் கடத்தப்பட வேண்டிய கருத்துகளை, ‘பளிச்’சென புரியும்படி, அடித்தட்டு மக்களும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையில் திரைப்படமாகத் தந்திருக்கும் இயக்குநரை வாழ்த்த வேண்டும்.
பதின் பருவ விடலைப்பருவப் பையன்களுக்கு மத்தியில் உடலுறவு குறித்த எதிர்பார்ப்புகள், வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் சிடி வாங்கிப் பார்த்து தீர்த்துக் கொள்ளும் சமூகமாகத்தான் இச்சமூகம் இருக்கிறது. (இதுகுறித்து சக ஆசிரியர்களிடம் பேசுகையில், அவர்களது பகிர்வுகள் நம்மைத் திடுக்கிட வைக்கின்றன. 11 வருடம் முன்பு தாம்பரம் பகுதி மெட்ரிக் பள்ளியில் இதுபோன்ற நீலத் திரைப்படம் என வழக்கில் உள்ள சிடிக்கள் 500-க்கும் மேல் ஒரே நாளில் பிடிபட்டுள்ளது. விசாரித்ததில், அவரவர் அம்மாக்கள் வேலைக்குச் சென்ற பிறகு மாணவர்கள் 4, 5 பேர் சேர்ந்து ஒருவரது வீட்டில் இப்படங்களைப் பார்ப்பது கண்டறியப்படுகிறது. ஏறத்தாழ 11 வருடங்கள் கழித்து சினிமாவில் இதே காட்சி இடம்பெறுகிறது).
அதுபோன்று தவறுகின்ற குழந்தைகளை, சமூக விரோத செயல்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் கழுகுகளாய் நம் சமூகத்தில் சுற்றிக் கொண்டிருப்பதும் எதார்த்தமாகத் திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. எனில், நமது கல்வி முறையின் சறுக்கல்கள், அறிவியலை இதுவரை சரியாகப் போதிக்காததுதான் எனலாமா?
ஒருபுறம் மதத்தின் பேரில், கடவுளின் பேரில் வெறிபிடித்து அலையும் மனிதர்கள், உயிர் போகும் தருவாயில்கூட மருத்துவத்தை, விஞ்ஞானத்தை நம்பாமல், கடவுள் சிலை முன்னே மன்றாடும் பழக்கம், அவர்களுக்கு யார் புரிய வைப்பது? கடவுள் மீது நம்பிக்கை வைப்பது வேறு , மூடநம்பிக்கையாகக் காயம்பட்ட இடத்திலிருந்து கொட்டும் ரத்தத்தை கடவுள் நிறுத்துவார், அற்புதங்கள் படைப்பார் என அவர் தலையை உருட்டும் கூட்டம், காலம் காலமாக சிந்தனையை மாற்றவிடாமல் குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் மக்களின் ஒரு பிரிவினரை உணர்த்தி, அது வெறும் கல்தான் எனப் புரியவைக்க முயன்றிருக்கிறது. அதற்கான நடிப்பை மிஷ்கின் வெகு தத்ரூபமாகச் செய்திருப்பதும் க்ளாசிக். இதுவும் சமூகத்தை அப்படியே காட்டுகிறது.
இந்த வேளையில், காயம்பட்ட சிறுவனைக் கடவுளின் நம்பிக்கையிலிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அரசியல்வாதி ஒருவரை (கவுன்சிலர்) துணைக்கழைக்கும் வேளையில், அவரது முயற்சியை வீடியோவாக்கி இணையத்தில் பகிர ஒரு உதவியாள்... என்னங்கடா நடக்குது? வரலாறு முக்கியமில்ல, வீடியோ எடுப்பது இன்றைய நடைமுறைதானே...
திருநங்கைகளுக்கு நமது சமூகம் பல வழிகளில் தரும் அழுத்தங்கள், உறவுகளின் புறக்கணிப்பு, சாடைப் பேச்சுகள், பலவித மனிதர்களும் அவர்களை நடத்தும் வேதனைமிகு அணுகுமுறைகள், காவல் துறையின் அதிகாரிகள் அளவில் அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள், பள்ளிகளில் சிறு மாணவர்கள் பார்வையில் அவர்களை 9 என்பதும், ‘உஸ்’ என்று கிண்டல் செய்வதும் மிக மிக எதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது.
ஒரு இளம் கணவன் - மனைவிக்கிடையில் இருக்கும் எதார்த்த வாழ்க்கை, முன்பே காதலித்த கல்லூரி நண்பனுடன் பேசியதால், அவனது மன அழுத்தத்தைப் போக்கும் எண்ணத்தில் வீட்டிற்கு அழைக்க, உடலுறவு நிகழ்ந்துவிட, அதை இயல்பாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் பெண்ணின் உண்மை நிலை. இறந்து போகிறான் காதலன். அதைக் கணவன் - மனைவியாக இணைந்து அப்புறப்படுத்த முயலும்போது கண்காணித்து, சாட்சி உருவாக்கி, அதைக்கொண்டே அந்தத் தம்பதியரை மிரட்டி மனைவியைத் தன்னுடன் அனுப்ப கணவனையே ஏவிவிடும் காவல் தெய்வம் (போலீஸ்). அப்பப்பா... எத்தனைவிதமான புரையோடிய சமூகமாய் இருக்க, அதையும் அனுசரித்துப் போகும் மனநிலை.
‘நீ ஆம்பளையா இரு, இல்லாட்டி பொம்பளயா இரு. எப்படி வேணா இரு. ஆனா, எங்ககூட இருந்து தொலச்சுட்டுப்போயேன்...’னு 5 வயசு பையன் அப்பா பாசத்தால் பேசும் வசனங்கள் நெகிழ வைக்குது.
டாக்டர், டிரைவர் மாதிரி விபச்சாரப் படங்களில் நடிப்பதும் ஒரு தொழில்தான். லட்சக்கணக்கான பேர் அதைப் பார்க்கும் நிலையில் இருக்க, அவர்களைக் கேள்விக்குள்ளாக்காமல் நடிக்கும் என்னை அசிங்கப்படுத்துவது எந்த விதத்தில் சரி? என சமூகத்தை அறைகிறார் ரம்யா கிருஷ்ணன்.
‘நகம் வெட்டிக்கிற மாதிரி, முடி வெட்டிக்கிற மாதிரி , என் உடலை மாத்திக்கிட்டு எனக்குப் புடிச்ச மாதிரி வாழறேன்’ என்று சொல்லும் திருநங்கை விஜய் சேதுபதியிடம், ‘நீ சொல்வது நியாயம்தான். ஆனா, இங்க நியாயம் வேற, நடைமுறை வேற’ன்னு சம்மட்டியால் அடிப்பது போல பூக்கார அம்மா சொல்வது செம.
‘எல்லாமே தற்செயலாத்தான் நடக்குது. நம்மகிட்ட நிறைய கற்பிதங்கள் இருக்கு. அதை மாற்றி, மகிழ்ச்சியா வாழுங்க’ என்று ஒரு மெஸேஜ் சொல்ல வராங்க.
அதோடு... சமூக எதார்த்தத்தைப் பதிவுசெய்கிற இப்படம், மன உணர்வுகளை அடுக்கடுக்காகப் பதிவுசெய்கிறது. ஒரு காமெடி டிராக் இல்ல, பாட்டு இல்ல, மியூஸிக் இல்ல. ஆனா, அப்படி ஒரு அட்டகாச நிறைவைத் தரும் படமாக இருக்கிறது.
இவ்வாறு உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
ஒரே டம்ளரில் 5 சுவை: ‘லேயர் டீ’யில் அசத்தும் மாணிக்கம்