

'அலாவுதீனின் அற்புத கேமரா' படம் வெளிவராத நிலையில், அதற்கான காரணம் என்னவென்று இயக்குநர் நவீன் விளக்கமளித்துள்ளார்.
‘மூடர் கூடம்’ படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இந்தப் படத்திலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். முழுவதும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு, கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதற்கான காரண்ண என்னவென்று தெரியாமல் இருந்தது. தற்போது முதன்முறையாக இது குறித்து பேட்டியொன்றில் விலாவரியாக பேசியுள்ளார் இயக்குநர் நவீன். அதில் அவர் கூறியிருப்பதாவது:
2016-ல் ஃப்ளாஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் படம் பண்ணுவதற்காக அழைத்தார்கள். அந்நிறுவனத்தின் மருமகன் லாஸ் ஏஜெல்ஸ் நகரில் நடிப்பு பயிற்சி எல்லாம் படித்துள்ளார். ரொம்ப அர்ப்பணிப்புள்ள நடிகர். அவர் தான் தற்போது ரஜினியின் மருமகன் விசாகன்.
முதலில் மாட்டேன் என்றேன், பின்பு ஒரு அட்வான்ஸ் கொடுத்தார்கள். அடுத்த ஒரு வாரத்தில் அட்வான்ஸ்யை திருப்பி கொடுக்கச் சென்றேன். அப்போது உங்களுக்கு எவ்வித பிரச்சினையுமே இருக்காது, மீடியா வகையிலும் நல்ல உறுதுணை இருக்கும் என்று பேசினார்கள். நானும் சரி பண்ணலாம் என்று ஒப்புக் கொண்டேன். முதல் பிரதி அடிப்படையில் அப்படம் பண்ணுவதாக இருந்தது.
முதல் பிரதி என்றால், அவர்களுடைய நிறுவனம் ஒரு பட்ஜெட்டை முடிவு செய்து என்னுடைய நிறுவனத்துக்கு கொடுப்பார்கள். அதற்குள் நான் படம் பண்ணிக் கொடுக்க வேண்டும். இதற்காக முதலில் 44.5 லட்ச ரூபாய் கொடுத்தார்கள். அதற்காக ஒன்றரை மாதத்தி கதை ஒன்றை தயார் செய்தேன். அக்டோபர் 31-ம் தேதி இரவு விசாகன், ராகுலன் உள்ளிட்டோரை அமர வைத்து முழுக்கதையையும் சொன்னேன். இப்படியொரு கதையைக் கேட்டதே இல்லை.சூப்பராக இருக்கு என்று சொன்னார் விசாகன்.
ஷுட்டிங் போகலாம் என்று முடிவு செய்த போது தான் பணமதிப்பு நீக்கம் நடைபெற்றது. இதனால் 2 மாதங்கள் தள்ளிவைக்கலாம் என்றார்கள். இந்த கேப்பில் தான் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்ய வெளிநாடுகளுக்கு சென்றேன். தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எல்லாம் அட்வான்ஸ் தொகையும் கொடுத்தேன். இப்படத்துக்கான அனைத்து வேலைகளையும் தொடங்கி பண்ணிட்டு இருந்தேன்.
8 மாதங்கள் கழித்து விசாகன் குடும்பத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அதனை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. அதை வைத்து ஒரு ஒன்றரை மாதம் ஷுட்டிங் தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் படம் வேண்டாம் என்றார்கள். அதற்கான காரணத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
அப்போது விசாகனுடைய மாமா 20 லட்சம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்றார். நானோ இவ்வளவு நாள் பணிபுரிந்திருக்கிறேன். அனைவருக்கும் அட்வான்ஸ் வேறு கொடுத்துவிட்டேன். எப்போது வேண்டுமானாலும் நான் படம் பண்ணி தருகிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால், விசாகனுக்காக தான் படத்தயாரிப்பு நிறுவனமே தொடங்கினோம். இப்போது அவரே இல்லை என்ற போது, நாங்கள் ஏன் படம் பண்ணப் போகிறோம் என்றார். ஷுட்டிங் போக பணமே தரவில்லை என்பதால் படமும் ட்ராப்பாகிவிட்டது.
'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தை 3 நண்பர்கள் உதவியுடனும், பிரபல பைனான்ஸியரிடமும் பணம் வாங்கி தொடங்கினேன். இது தொடர்பாக செய்திகள், டீஸர் என அவ்வப்போது வெளியிட்டு தான் வந்தேன். இப்போது என் படத்தின் மீது தடை வாங்கியிருக்கிறார்கள். இதை க்யூப் நிறுவனத்திடம் சொல்லி எனக்கு தகவல் வந்தது.
நான் 3 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் நாளிதழில் செய்தி கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் ஏன் தொடங்கப்படவில்லை என்பது அவருக்கும், எனக்கும் சில நெருங்கிய வட்டாரத்துக்கு மட்டும் தெரியும். இது தொடர்பாக விசாகனிடமே கேட்கலாம். 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்துக்கு ஃப்ளாஸ் பிலிம்ஸுக்கும் எவ்விதம் சம்பந்தமும் இல்லை.
ஒப்பந்தத்தில் என்ன போட்டிருக்கிறோமோ அதை நான் பின்பற்றி இருக்கிறேன். இப்பவும் பணம் கொடுத்தால் படப்பிடிப்பு போக தயாராக இருக்கிறேன். படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளுமே பார்த்திருக்கிறேன். அப்படம் நடக்காமல் இருப்பதற்கு காரணம் நானல்ல. அவர்கள் தான். அந்த ஒப்பந்தப்படி அவர்கள் தான் நடக்கவில்லை. என்ன காரணத்தால் இப்படம் நடக்கவில்லை என்பதற்கான காரணத்தை நான் சொல்ல விரும்பவில்லை.
இவ்வாறு இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.