

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாக அறிவித்துள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர்
ஆசிய தடகளப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் 22-ம் தேதி நடந்த 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்றார். கோமதி 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் தங்கம் இதுவாகும்.தங்கப்பதக்கம் வென்ற கோமதிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ரோபோ ஷங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆசிய தடகளப் போட்டியில் அற்புதமாக தன் திறமையை வெளிக்காட்டிய அன்பு சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவருக்கு எனது சின்ன அன்புப் பரிசாக 1 லட்ச ரூபாய் கொடுக்கிறேன். இது பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்பாக ராணுவ வீரர் இறந்த குடும்பத்துக்கு கொண்டு போய் கொடுத்தேன். தமிழக ராணுவ வீரர் இறந்ததால் மிகவும் வருத்தத்துடன் அளித்தேன். நம்மைக் காக்கக் கூடிய எல்லைச் சாமிகளுக்கு ஒரு சின்ன விஷயமாக அதைச் செய்தேன்
ஆனால், கோமதி மாரிமுத்துக்கு பெருமையாக பண்ணுகிறேன். தந்தையாரும் இறந்து, பயிற்சியாளரும் இறந்து உடல்நிலையும் பாதிக்கப்பட்டு விடாமுயற்சியாக ஓடி ஜெயித்து தங்க மங்கை கோமதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நானும் ரொம்ப கஷ்டப்பட்டு வந்த குடும்பம் தான். தன்னம்பிக்கையும் எவ்வித பின்புலம் இல்லாமல் வந்ததால், கஷ்டப்படுவர்களுடைய வலி என்னவென்று எனக்கு தெரியும். அதைத் தாண்டி அவ்வளவு வலிகளுடன் இன்று ஜெயித்துள்ளீர்கள் என்றால் உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்.
அனைத்து பெண்களுக்கும் இது ஒரு ஊக்கமாக இருக்கும். அவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆசியளவிலான தடகளப் போட்டியில் ஜெயித்திருக்கிறார் என்றால், அது பாராட்டக்கூடிய விஷயம். என்னால் முடிந்த சிறுதொகை 1 லட்ச ரூபாய் கொடுப்பதில் பெருமைப்படுகிறேன். இன்னும் நிறைய விருதுகள் வாங்க வேண்டும். இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு ரோபோ ஷங்கர் பேசியுள்ளார்.