

தெலுங்கில் முதல் வெற்றி கிடைத்திருப்பதை, 'பேட்ட' படத்தின் வசனத்துடன் ஒப்பிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அனிருத்.
கெளதம் தின்னானூரி இயக்கத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜெர்சி'. சித்தாரா எண்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை, விமர்சகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்துக்காக அனிருத் உருவாக்கிய பாடல்களும், அவருடைய பின்னணி இசையும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனிருத்துக்கு தெலுங்கில் கிடைத்த முதல் வெற்றி இது.
இந்த வெற்றி குறித்து அனிருத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஜெர்சி படம் தொடர்பான விமர்சனங்களையும் கருத்துகளையும் படித்துவிட்டு என் ஸ்டுடியோவில் உள்ளவர்களின் வெளிப்பாடு இதுதான். நானி, இயக்குநர் கெளதம் நாக வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் முதல் தெலுங்கு வெற்றிக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இசையமைப்பில் வெளியான 'பேட்ட' படத்தின் சிறு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி பேசும் 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற ரஜினியின் ஹிட்டான வசனம் இடம்பெற்றிருந்தது.
இந்த வீடியோவை அனிருத் வெளியிட்டதற்கு ஒரு காரணம் உள்ளது. என்னவென்றால், த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி' படமே அனிருத் தெலுங்கில் இசையமைத்த முதல் படமாகும். இப்படம் படுதோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து வந்த தெலுங்கு வாய்ப்புகளைத் தவிர்த்தார் அனிருத்.
தற்போது, தெலுங்கில் முதல் வெற்றி கிடைத்திருப்பதையே 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்ற 'பேட்ட' வசனத்துடன் அனிருத் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.