Last Updated : 07 Apr, 2019 12:13 PM

 

Published : 07 Apr 2019 12:13 PM
Last Updated : 07 Apr 2019 12:13 PM

ரஜினியின் ‘குப்பத்து ராஜா’

’குப்பத்து ராஜா’ எனும் டைட்டிலில், ஜிவி.பிரகாஷ் நடித்த படம்  வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த டைட்டிலில் ரஜினி நடித்திருப்பது தெரியும்தானே. 5.4.19 அன்று இப்போது ரிலீசாகி இருக்கிறது ‘குப்பத்து ராஜா’. ரஜினிகாந்த் நடித்த ‘குப்பத்து ராஜா’, 1979ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியானது. அதாவது 79ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகியிருக்கிறது.

ரஜினியும் விஜயகுமாரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். இரண்டு பேர் இருந்தாலும் ரஜினிதான் ‘குப்பத்து ராஜா’.

சரி... ரஜினியின் ‘குப்பத்து ராஜா’ என்ன கதை?

தங்கையின் திருமணத்துக்காகத் திருடுகிறான் ஜக்கு. அவனுடைய முழுப்பெயர் ஜெயக்குமார். அந்தப் பணத்தை வீட்டில் அம்மாவிடமோ தங்கையிடமோ சேர்க்கமுடியாத நிலை. ஒரு வீட்டின் கதவைத் தட்டி, விஷயம் சொல்லி, பணத்தைக் கொடுக்கிறான். ‘இந்தப் பணத்தை எப்படியாவது என் வீட்டில் கொடுத்துவிடுங்கள். என்னை போலீஸ் தேடுகிறது’ என்று சொல்லிச் செல்கிறான்.

அப்போது அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பதையும் தெரிவிக்க, அந்த இடத்துக்கு வந்து போலீஸ் கைது செய்கிறது. ஜெயிலில் அடைக்கிறது. சிறையில் இருந்து ரிலீஸாகி வெளியே வருகிறான் ஜக்கு.

திருமணத்துக்குப் பணமில்லாததால் அம்மா நெஞ்சுவலியால் இறக்க, தங்கை தற்கொலை செய்துகொள்கிறாள் என்று நண்பன் சொல்ல உடைந்து ஆவேசமான ஜக்கு, பணம் கொடுத்தவனின் வீட்டுக்குச் சென்று அவனைக் கொல்லுகிறான். அவன் மகளை தூக்கிக் கொண்டுவந்து, விபச்சார விடுதியில் சேர்க்கிறான்.

அப்பாவைக் கொன்று, தங்கையைத்  தூக்கிச் சென்றதை அறிந்த செல்வம் எனும் டாக்ஸி டிரைவர், ஜக்குவைப் பழிவாங்கத் துடிக்கிறான். அதேபோல், அவனையும் கொன்றுவிட ஜக்கு தேடிக்கொண்டிருக்கிறான். இருவரும் முகம் தெரியாமலேயே தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

செல்வத்துக்கு ஒரு காதலி. பெயர் மைனா. ஒருநாள், காலில் குண்டடி பட்ட காயத்துடன் செல்வத்தின் டாக்ஸியில் ஏறி மயங்கிவிழுகிறான் ஜக்கு. அப்போது செல்வத்தின் காதலியை தன் தங்கையாகவே நினைக்கிறான். செல்வத்துக்கும் ஜக்குவுக்கும் நட்பு அங்கே பலப்படுகிறது. சேர்ந்தே இருக்கிறார்கள்.

ஒருநாள், அந்த ஏரியாவில் உள்ள பெருந்தனக்காரர் குப்பத்தை காலி செய்யும்படி சொல்ல, ‘எவ்ளோ பணம் வேணும். நாங்க காலி பண்ணமுடியாது’ என்று ஜக்கு சொல்ல, அவன் சொன்ன பணத்தை அவனுடைய வீட்டிலேயே திருடிக்கொண்டு வந்து அவனிடம் தருகிறான் ஜக்கு. அன்று முதல் அவன் குப்பத்து ராஜாவாகிறான்.

நடுவே, விபச்சார விடுதியில் இருந்தாலும் பாட்டுப் பாடியும் ஆடியும் மட்டுமே மகிழ்விக்கிறாள் செல்வத்தின் தங்கை. ஊர்ப்பணக்காரனுக்கு ஜெயக்குமார்தான் ஜக்கு எனும் விவரமும் ஜக்குதான் செல்வத்தின் அப்பாவைக் கொன்றான் என்பதும் தெரியவருகிறது. இந்த விஷயமெல்லாம் ஜக்குவுக்குத் தெரியவர, செல்வத்துக்கும் மைனாவுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்கிறான். செல்வத்தின் தங்கைக்கு ஜக்குவை அடையாளம் காட்டுகிறான் அந்தப் பணக்காரன். அப்போது, ’உன் அப்பா நான் கொடுத்த பணத்தை என் அம்மாவிடம் தராமல் ஏமாற்றிவிட்டார். அதனால் என் அம்மாவையும் தங்கச்சியையும் இழந்தேன். அந்த ஆத்திரத்தில்தான் கொலைசெய்தேன்’ என்று சொல்ல, விவரமெல்லாம் தெரிந்த செல்வமும் அவன் தங்கையும் ஜக்கு என்கிற ஜெயக்குமாரை மன்னிக்கிறார்கள்.

போலீஸ் வருகிறது. கைது செய்கிறது. ரத்தத்தால், செல்வத்தின் தங்கைக்கு திலகமிட்டுக் கிளம்புகிறான். குப்பத்து ராஜா பாடல் ஒலிக்க, வணக்கம் கார்டுடன் முடிகிறது திரைப்படம்.

ரஜினி, விஜயகுமார், மஞ்சுளா, பத்மப்ரியா, அசோகன், மனோரமா முதலானோர் நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். டி.ஆர்.ராமண்ணா இயக்கியிருந்தார். ரஜினியின் நடிப்பும் விஜயகுமாரின் நடிப்பும் கச்சிதமாக அமைந்திருந்தது. மஞ்சுளாவும் பத்மப்ரியாவும் உரிய வகையில் கேரக்டருக்கு சிறப்பு சேர்ந்திருந்தார்கள்.

ரஜினியின் அசால்ட்டான நடிப்புதான் படத்தின் ப்ளஸ். 79ம் வருடத்தில், அலாவுதீனும் அற்புத விளக்கும், அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை, தர்மயுத்தம், நான் வாழவைப்பேன், நினைத்தாலே இனிக்கும், குப்பத்து ராஜா என ஏழு படங்கள் வெளியாகின. இதில், அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை, தர்மயுத்தம், நினைத்தாலே இனிக்கும், நான் வாழவைப்பேன் முதலானவை வெற்றிப்படங்களாக அமைந்தன. மலையாளத்தில் இருந்து ‘டப்’ செய்யப்பட்ட ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ திரைப்படம் சுமாராகத்தான் ஓடியது. அதேபோல் ‘குப்பத்து ராஜா’ திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனாலும் ரஜினியின் ‘குப்பத்து ராஜா’ படத்தின் டைட்டில், ரசிகர்களின் மனங்களில் அழுத்தம்திருத்தமாகவே பதிந்துவிட்ட ஒன்று. ரஜினியின் ‘குப்பத்து ராஜா’ வெளியாகி 40 வருடங்களுக்குப் பிறகு, ஜிவி.பிரகாஷின் நடிப்பில் ‘குப்பத்து ராஜா’ தற்போது வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x