

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு, டெல்லியில் நடைபெற இருக்கிறது.
விஜய் நடிப்பில் மூன்றாவது முறையாக ஒரு படத்தை இயக்கிவருகிறார் அட்லீ. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப் படத்தில், வில்லனாக ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கால்பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்க, பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்துகாகத் தன் உடலமைப்பை மாற்றியுள்ளார் விஜய். மேலும், இந்தப் படத்துக்காக மிகப்பெரிய கால்பந்து மைதானம் போல் செட் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெறுகிறது.
தற்போது சென்னைக்கு அருகிலுள்ள ஈவிபி பொழுதுபோக்குப் பூங்காவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வருகிற 29-ம் தேதியுடன் இங்கு படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன்பிறகு, மே 3-ம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.