Last Updated : 19 Apr, 2019 08:48 PM

 

Published : 19 Apr 2019 08:48 PM
Last Updated : 19 Apr 2019 08:48 PM

முதல் பார்வை: மெஹந்தி சர்க்கஸ்

கேசட்டில் பாடல் பதிவு செய்யும் இளைஞனுக்கும் சர்க்கஸில் சாகசம் புரியும் பெண்ணுக்கும் இடையே காதல் முளைத்தால் அதில் சிக்கல் எழுந்தால் அதுவே 'மெஹந்தி சர்க்கஸ்'.

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் ஆடியோ வடிவில் கேசட்டில் பாடலைப் பதிவு செய்து தருகிறார் ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்).  இளையராஜா பாடல்கள் மூலம் ஊரில் இருக்கும் இளைஞர்களின் காதலை வளர்க்கிறார். இந்த சூழலில் அந்த ஊருக்கு சர்க்கஸ் போட மகாராஷ்டிராவில் இருந்து ஒரு குழு வருகிறது.

அக்குழுவில் இருக்கும் மெஹந்தியைப் (ஸ்வேதா திரிபாதி) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். நாளடைவில் மெஹந்தியும் ஜீவாவைக் காதலிக்க, பிரச்சினை மெஹந்தி அப்பா (சன்னி சார்லஸ்) வடிவில் வருகிறது. சர்க்கஸில் நடக்கும் சாகசத்தைப் போல் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் தன் மகள் மீது 9 கத்திகளை வீச வேண்டும். அதில் ஒன்றுகூட அவள் மீது படக்கூடாது. அப்படி சாகசம் புரிந்தால் என் பெண்ணைக் கொடுக்கிறேன் என்கிறார்.

இதனிடையே சாதி வேறுபாடு பார்க்கும் தந்தை ராஜாங்கத்துக்கு (மாரிமுத்து) மகனின் காதல் தெரிய வருகிறது. நாயகனின் தந்தை, நாயகியின் தந்தை என ஒரே மாதிரியான இரு பிரச்சினைகள் சூழ,  ஜீவா- மெஹந்தியின் காதல் என்ன ஆனது, ராஜாங்கத்தின் சாதி வெறி தணிந்ததா, மெஹந்தியின் அப்பா என்ன முடிவெடுத்தார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

1992-ல் ஆரம்பிக்கும் காதல் கதை 2010-ல் முடிவதாக ராஜுமுருகனும் இயக்குநர் சரவண ராஜேந்திரனும் கதை பின்னியிருக்கும் விதம் அலாதியானது. அன்பின் அடர்த்தியை காதலின் ஆழத்தை மிக நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரனுக்கு வாழ்த்துகள்.

நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் எண்பதுகளின் ஹீரோவை கண்முன் நிறுத்துகிறார். மதுபானக் கடையில் அமர்ந்தபடி பாடலைச் சொன்னால் பாடகர்கள் பெயரைச் சொல்லும் அளவுக்கு இசையில் மிதந்த ரங்கராஜின் அறிமுகப் படலமே ரசிக்க வைக்கும் ரகம். காதல் பூத்த தருணத்தில் வெட்கம் படரச் சிரிப்பது, இயலாமையில் கோபிப்பது என கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொள்கிறார். ஆனால், சோகம், வெறுமை போன்ற உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தாமல் ஒரே மாதிரியான பாவனைகளில் இருப்பது நெருடல்.

இந்திப் படமான மாசானில் கவனிக்க வைத்த ஸ்வேதா திரிபாதி தமிழில் மெஹந்தியாக அசத்தல் நடிப்பை வழங்கியுள்ளார். காதலின் மொழியை கண்களால் வெளிப்படுத்தும் ஸ்வேதா படம் முழுக்க நடிப்பால் வசீகரிக்கிறார். காதலிப்பதற்கான காரணத்தைச் சொல்லும்போது அட போட வைக்கிறார்.

ஒரே மாதிரியான கேரக்டர்களில் பார்த்துப் பழக்கப்பட்ட வேல.ராமமூர்த்திக்கு மாறுபட்ட கதாபாத்திரம். அதை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். பாதிரியாராகவும், அன்பின் அதிபதியாகவும் அவர் பூம்பாறை கிராமத்து இளைஞர்களை ஆசிர்வதிக்கும் விதம் பிரமாதம்.

ரங்கராஜின் நண்பனாக வரும் ஆர்ஜே விக்னேஷுக்கு இது முக்கியமான படம். நகைச்சுவை கலந்த குணச்சித்ரக் கதாபாத்திரத்தில் இயல்பு மீறாமல் நடித்துள்ளார். கத்தி வீசும் ஜாதவ் கதாபாத்திரத்தில் நடித்த அன்கூர் விகால், மெஹந்தியின் அப்பா சன்னி சார்லஸ், ராஜாங்கமாக நடித்த மாரிமுத்து, மெஹந்தியின் மகளாக நடித்த பூஜா ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமாரும் ஷான் ரோல்டனின் இசையிம் பின்னணியும் ராஜுமுருகனின் அளவான வசனங்களும் படத்தின் தரத்துக்கு வலு சேர்க்கின்றன. இளையராஜா இசையை நினைவூட்டும் வெள்ளாட்டுக் கண்ணழகி, வெயில் மழையே பாடல்கள் ரம்மியம். பழைய பேருந்துகள், அன்றைய இதழ்கள், படத்தின் போஸ்டர்கள் என 1992-2010 காலகட்டத்தை அப்படியே காட்டியதில் கலை இயக்குநர் சதீஷ்குமாரின் உழைப்பு பளிச்சிடுகிறது.

ஜெயலலிதா பாடிய பாடல், ரோஜா படத்துக்கு இசையமைத்ததின் மூலம் ரஹ்மான் மீது எழுப்பப்பட்ட ஒன் டைம் வொண்டர் தொடர்பான கேள்விகள்- விமர்சனங்கள், இளையராஜாவின் இசை, கொடைக்கானல் சூழல், சர்க்கஸ் பின்னணி என படத்துக்கான வலுவான பின்னணி நுட்பமான காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சாதி வெறியராக இருக்கும் மாரிமுத்துவும் நடக்கும் துயரம் அப்பட்டமான உண்மையின் வெளிப்பாடு. வேல ராமமூர்த்தியுடன் லேடீஸ் வாட்ச்சை வைப்பது அவரின் உன்னத அன்புக்கு நியாயம் சேர்க்கிறது.  கத்தி வீசும் சாகசத்தை படத்தில் மிகச் சாதுர்யமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதற்கான இறுதிக் காட்சியும் ஆஸம்.

கதையின் போக்கு பிடிபட்ட பின்பும் அதனை இழுப்பதுதான் கொஞ்சம் சோர்வை வரவழைக்கிறது.  மெஹந்தி நடந்தது என்ன? அதற்கு யார் காரணம் என்பதும் யூகிக்க முடிகிற அம்சங்களே. இதைத்தாண்டி எளிய மக்களின் காதலை மிக நேர்மையாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் விதத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மனதில் நிற்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x