

சிவாஜி கணேசன் மாஸ்டர்; நாம் அவரது சீடர்கள் என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயர்ந்த மனிதன்'. தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகும் முதல் நேரடி தமிழ் படம் இதுவாகும்.
இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் தமிழ்வாணன். இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்று, அமிதாப் பச்சனுடன் எடுத்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இதன் படப்பிடிப்பு தளத்தில் ஒரு வீட்டினுள் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும், அதற்கு கீழே அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமிதாப் பச்சன் தெரிவித்திருப்பதாவது:
சிவாஜி கணேசன் எனும் தலைவனின் நிழலில் இரு சீடர்கள், எஸ்.ஜே. சூர்யாவும் நானும். சிவாஜி, தமிழ் சினிமாவின் உச்சபட்ச பழம்பெரும் அடையாளம். அவரது புகைபடம் இந்த சுவருக்கு அழகு சேர்க்கிறது.
அவர் வியத்தகு திறமை கொண்டவர். அவருக்கு எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். தாழ் பணிந்து வணங்குகிறேன். அவர் மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள்
இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.